சீனியர் சந்திப்பில் கௌரவம் செய்யவிருக்கும் ஜூனியர்கள்..!

 

எண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்தித்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்.. அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் வகையில், அப்படி வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

2009–ல் இவர்களின் முதல் சந்திப்புக்கான ஏற்பாடுகளை நடிகைகள் லிசியும், சுகாசினியும் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் இந்த குதூகல சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த வருடம் மோகன்லாலின் பண்ணை வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினி தலைமையில் 80களில் அனைத்து மொழிகளிலும் கோலோச்சிய நட்சத்திரங்கள் ஒன்று கூடி கொண்டாடினர்.

இந்த வருட கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை ராதிகாவின் மகளான ரயான் முன்னின்று கவனித்து வருகிறார். வழக்கமாக சீனியர்கள் மட்டும் ஒன்றுகூடி பங்கேற்கும் இந்த நிகழ்வில் இந்த வருடம் சிம்பு, வைபவ், மகத், பிந்து மாதவி, வரலட்சுமி சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷோபனா, மதுபாலா, காயத்ரி ரகுராம், இனியா, உள்ளிட்ட ஜூனியர்களையும் கலந்து கொள்ள வைத்து சீனியர்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு காணிக்கை செலுத்தும் விதமாக இந்த நிகழ்வை நடத்த இருக்கிறார்களாம்.