நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23-ந் தேதி தேர்தல்

சென்னை, மே.29- நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர். சமீபத்தில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூடி தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமனம் செய்தது.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று பத்மநாபன் நேற்று அறிவித்தார். ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இந்த தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாள். 14-ந்தேதி மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகும்.

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.