ஜூலை காற்றில் – விமர்சனம்

தனக்கும் ஆசையாக பேசி பழக ஒரு கேர்ள் பிரண்ட் கிடைக்க மாட்டாளா என ஏங்கித் தவிக்கிறார் அனந்த் நாக். எதிர்பாராதவிதமாக ஒரு பார்ட்டியில் அஞ்சு குரியனின் நட்பு கிடைத்து ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நிச்சயக்கப்பட்ட வேளையில் தனக்கு அஞ்சு குரியன் மீது இருப்பது காதல் அல்ல, வெறும் நட்பு.. அக்கறை உணர்வு மட்டுமே என்பதை உணர்கிறார் அனந்த்நாக். அதே சமயம் இன்னொரு நிகழ்ச்சி ஒன்றில் புகைப்பட கலைஞராக பங்கேற்கும் சம்யுக்தா மேனன் மீது தன்னையறியாமலேயே அனந்த் நாக்கிற்கு ஈர்ப்பு தோன்றுகிறது.

தனக்கான சரியான பெண் இவள் தான் என நினைக்கும் அனந்த் நாக் அஞ்சு குரியனிடம் நாகரிகமாக தனது காதலை முறித்துக் கொள்கிறார்.. ஆனால் ஒரு காலகட்டத்தில் சம்யுக்தா மேனனுடன் காதலை தொடர்வதற்கு இருவரின் குணாதிசயங்களும் இடைஞ்சலாக இருக்கின்றன.. தன்னை காதலித்த அஞ்சு குரியனிடம் அனந்த் நாக் என்னென்ன அலட்சியம் காட்டினாரோ அவையெல்லாம் சம்யுக்தா மேனன் மூலமாக அவருக்கே திரும்ப கிடைக்கின்றன.. எது சரியான காதல், யார் தனக்கு பொருத்தமானவர் என அனந்த் நாக் இறுதியில் உணர்ந்தாரா..? யாருடன் அவரது காதல் கை கூடியது என்பது கிளைமாக்ஸ்.

இக்காலத்தில் பல இளைஞர்கள் காதல் எது, நட்பு எது என தெரியாமல் எப்படி குழப்பிக் கொள்கிறார்கள் என்பதை நாயகன் அனந்த்நாக் படம் முழுவதும் தனது அழகான நடிப்பால் மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார். காதலனுக்காக பல விஷயங்களை விட்டுக் கொடுக்கும் அஞ்சு குரியன் கதாபாத்திரமும் அதை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கும் விதமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.. அதே போல காதலுக்காக எதையுமே விட்டுக் கொடுக்க விரும்பாத துணிச்சலான பெண்ணாக சம்யுக்தா மேனனின் நடிப்பு அதிர வைக்கிறது.. இருந்தாலும் அனந்த் நாக், சம்யுக்தா மேனன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் அடிக்கடி ரிபீட் ஆவது போல ஒரு உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளுக்கும் தோழிகளாக வரும் பெண்கள் நம்மை வசியம் இருக்கும் அளவிற்கு, நாயகனின் நண்பனாக வரும் சதீஷின் காமெடி பெரிய அளவில் கவரவில்லை என்பது உண்மை.. சதீஷிற்கான வசனங்களை எழுதும் இயக்குனர்கள் அவர் பக்கம் நின்று யோசிக்காமல் தங்களுக்குத் தோன்றும் விதமாக சதீஷை மாற்றுவதுதான் இனிவரும் காலங்களில் சரியானதாக இருக்கும்.

ஜோஷுவா ஸ்ரீதர் இசையும் சேவியர் எட்வர்ட்ஸின் ஒளிப்பதிவும் வெகு நேர்த்தியாக இணைந்து பயணிக்கின்றன. இதுவும் வழக்கமான காதல் படம் தானே என அசிரத்தையாக தியேட்டருக்குள் வந்து அமரும் ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுக்கிறது இந்த ஜூலை காற்றில் படம்.. ஓஹோ என சொல்ல முடியாவிட்டாலும் ஆஹா என சொல்ல வைக்கும் விதமாக காதலை பற்றியும் காதலை இன்றைய காதலர்கள் ஒவ்வொருவரும் கையாளும் விதத்தையும் பார்த்து பார்த்து பிரித்து மேய்ந்திருக்கிறார் இயக்குனர் கே.சி.சுந்தரம்.

காதலிக்கத் துடிக்கும் பல இளைஞர்களுக்கும் காதலில் விழுந்த இளைஞர்களுக்கும் இனிமேல் காதலை எப்படி அணுக வேண்டும் என்கிற ஒரு பாடத்தை இந்த படம் நிச்சயம் கற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.