ஜோக்கர் – விமர்சனம்

Joker Tamil Movie Review

சாதாரண மனிதனின் எளிய வாழ்க்கையை கூட அரசியல் எவ்வாறு பிய்த்துப்போடுகிறது என்பதை ‘ஜோக்கர்’ மூலம் உணர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன்.. ‘குக்கூ’ படம் மூலம் நம் கவனம் ஈர்த்தவரின் அடுத்த படைப்பு என்பதாலும் அரசியல் நையாண்டி படம் என்பதாலும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது இந்தபடம்.

தன்னை ஜனாதிபதி என கூறிக்கொள்ளும் பப்பிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த மன்னர் மன்னன் சாமான்ய மக்களுக்காக போராடுகிறேன் என்கிற பெயரில் அரசாங்க அதிகாரிகளுக்கு மிகுந்த குடைச்சல் கொடுக்கிறார். அவருக்கு உதவியாக ஒரு வயதான பெரியவரும், கணவனை இழந்த இளம்பெண்ணும் துணை நிற்கின்றனர்.

அதிகாரிகள் அவர் மீது வழக்குப்போட்டு தங்களது அதிகாரத்தின் எல்லையை காட்டுகின்றனர்.. யார் இந்த மன்னர் மன்னன்..? இவர் ஏன் தன்னை ஜனாதிபதி என கூறிக்கொள்ள வேண்டும்..? அரசாங்க எந்திரத்தை தாண்டி, எதிரிகளால் ஏற்படும் ஆபத்தை இவரால் சமாளிக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்..

பழைய டி.வி.எஸ் 50ல் ஒரு பெரிய வெண்சாமரகுடை குடை ஒன்றை மாட்டிக்கொண்டு, கோட் சூட் போட்டுக்கொண்டு ‘நான் தான் ஜனாதிபதி’ என கூறிக்கொண்டு புறப்படும் மன்னர் மன்னனை (குரு சோமசுந்தரம்) முதல் காட்சியிலேயே நமக்கு பிடித்து விடுகிறது.. ஆரம்பத்தில் கோமாளியோ என நினைக்கவைத்தாலும், சமூக அவலங்களை களையெடுக்க அவர் நடத்தும் போராட்டங்கள் மூலம் காட்சிக்கு காட்சி நம்மை சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கிறார். அவர் ‘ஜனாதிபதி’ ஆனதன் பின்னால் உள்ள ‘ஒரு காதலும் ஒரு கழிப்பறையும்’ நம்மை நெகிழ வைக்கிறது.
கழிப்பறை உள்ள வீட்டுக்குத்தான் வாக்கப்பட்டு போவேன் என்று இன்றும்கூட தீர்மானமாக பிடிவாதம் காட்டும் பெண்களின் அடையாளமாக மல்லிகா கேரக்டரில் கிராமத்து யதார்த்த அழகுடன் பொருந்தி இருக்கிறார் ரம்யா பாண்டியன். குரு சோமசுந்தரத்தை ஆரம்பத்தில் ஒதுக்கிவிட்டு பின் மெல்ல மெல்ல அவரது செயல்களால் அவர்மேல் காதலாவது அழகு.

சோமசுந்தரத்திற்கு பக்கபலமாக இரு போராட்ட வீரர்களாக பொன்னூஞ்சல் கேரக்டரில் நடித்துள்ள மு.ராமசாமி மற்றும் இசை கதாபாத்திரத்தில் நடித்துள்ள காயத்ரி கிருஷ்ணா இருவரையும் தமிழக கிராமங்களில் இப்போதும் எளிய மனிதர்களுக்காக போராட்டிக்கொண்டிருக்கும் முகங்களாக நாம் பார்க்கலாம். இவர்கள் தவிர படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களும் கதையோட்டத்துடன் இணைந்து வலுப்படுத்தியுள்ளார்கள்.

ஷான் ரோல்டனின் இசை பாடல்களில் புது மேஜிக்கை அரங்ற்கேறுகிறது. ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.. அதை அரசியல் நையாண்டியுடன் காட்சியாக்கி இருக்கும் விதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் அலுப்பே இல்லாமல் பார்க்கலாம்.. செழியனின் கேமரா சந்தோசம், துக்கம், அவலம், கோபம் என எல்லாவற்றையும் படம் நெடுக தன் முதுகில் சுமந்துகொண்டு ஓடுகிறது.

எளிய மனிதர்களின் கதையை, அவர்கள் அன்றாடம் சந்திக்கும் அரசியலை மிக நுட்பமாக கையாண்டுள்ளார் இயக்குனர் ராஜூ முருகன். அதற்கு மேலும் வலு சேர்க்கின்றன அவரது சாட்டையடி வசனங்கள்.. ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆளத்துடிக்கும் கட்சி என எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு போட்டுத்தாக்குகின்றன.

ஒரு கழிப்பறை கட்டுவதன் பின்னணியில் உள்ள ஊழலும் அரசியலும் இன்றைய யதார்த்தம். படத்தின் இறுதியில் சொல்லப்படுவதுபோல யாருக்காக போராடுகிறோமோ அவர்களே போராடுகிறவர்களை ‘கோமாளி’களாக பார்ப்பது தான் இன்றைய சமூகத்தின் பரிதாபம். கதையாக்கத்திலும் காட்சிப்படுத்தலிலும் சிற்சில குறைகள் தென்பட்டாலும் ராஜூ முருகன் சொல்லவந்த, சொல்லியிருக்கும் விஷயத்தை கவனத்தில் கொண்டால் அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை.

ஜோக்கர் – ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இடது கை விரலில் வாக்குச்சாவடியில் மை வைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய வேண்டும்..