சிறந்த தமிழ்ப்படம் ; ஜோக்கருக்கு 2 தேசிய விருதுகள்..!

joker - national awrads

சமூகத்தில் மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசும் படங்களை எடுப்பவர்கள் வெகு சிலர் தான்.. ஆனால் சொல்லவந்த விஷயத்தை, பிரச்சனைகளின் வீரியத்தை சரியாக சொன்ன படங்கள் தோற்றது இல்லை. கடந்த வருடம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படம் பல சர்வேதச விருதுகளை பெற்றிருந்தாலும், இப்போது சிறந்த படம் என்கிற தேசிய விருது அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

ஆம் 2016ஆம் வருடத்திற்கான தேசிய விருது பட்டியலில் ஜோக்கர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த பாடகர் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த பாடகர் விருது சுந்தர் அய்யருக்கு கிடைத்துள்ளது..

இதுகுறித்து இயக்குனர் ராஜூ முருகன் கூறுகையில், “ஜோக்கர் மாதிரி கதையை எழுதும்போது அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே பெரிய விருது என்று தான் எண்ணினேன். அதை எனது தயாரிப்பாளர்கள் பிரகாஷ் மற்றும் பிரபு சரியாக செய்தார்கள், அவர்களுக்கு என் முதல் நன்றி.

ஜோக்கருக்கு கிடைத்த விருதை கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் பார்க்கிறேன். இதன்மூலம் இதுபோன்ற படங்கள் அதிகளவில் வெளிவர உதவும். மனித உரிமைகள் போராளிகள் பற்றிய படம் தான் ஜோக்கர் என்று நினைக்கிறேன். இந்த விருது அவர்களுக்கான ஒரு மரியாதையை கொடுக்கும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியபோது, “ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம் இருந்தாலும் எங்கள் நாயகன் குரு சோமசுந்தரம் அவர்களுக்கும் விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தோம் அவருக்கும் கிடைத்து இருந்தால் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் கூடி வரும்போது ஜோக்கர் திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய வாய்ப்பு இருக்கிறது” என்றார்.