ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை – விமர்சனம்..!

தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஜே.கே என்கிற சர்வானந்த், விபத்தில் சிக்குகிறார். நண்பன் இறந்துவிட, சர்வாவுக்கோ தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. மீண்டும் விளையாட்டுத்தனமாக வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிக்கும் அவருக்கு, தனது வாழ்நாள் இன்னும் கொஞ்ச காலம் தான் என்பது தெரியவருகிறது.

அதன்பின் வருமானத்தை நோக்கிய அவரது அசுர ஓட்டம் துவங்குகிறது.. நண்பர்களுடன் சேர்ந்து, வீடுகளை சுத்தப்படுத்தும் பணி, கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி என பறக்கிறார் சர்வா. தனது தங்கைக்கு திருமணம் செய்துவைத்து, தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான எல்லாவற்றையும் தயார் செய்கிறார்.

தனது நிறுவனத்தை தோழி நித்யா மேனனிடம் ஒப்படைத்துவிட்டு தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஒரு பறவை கூட்டத்தை விட்டு விலகுவதைப்போல, அனைவரையும் விட்டு விலகி, யாரும் அறியாவண்ணம் தனது மரணத்தை நோக்கி கிளம்பிச்செல்கிறார். இதுதான் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை.

கொஞ்சம் செயற்கையான கதை தான் என்றாலும் தங்களது இயல்பான நடிப்பால் படத்தை ஓரளவு சுவராஸ்யத்துடன் நகர்த்துகிறார்கள் சர்வானந்தும், நித்யா மேனனும்.. படத்தின் இறுதிவரை நட்பு எனும் கோட்டிலேயே பயணித்து, காதலில் விழும் நித்யா மேனன்-சர்வா இருவரும் காதலின் உன்னதத்தை உணர்த்தியுள்ளனர்.

காமெடி தோரணங்களால் படத்தின் கலகலப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளும் சந்தானம், ஓகே ஓகே பார்த்தாவாகவும் என்ட்ரி ஆகி டபுள் ட்ரீட் கொடுக்கிறார். கட்டுமான நிறுவன முதலாளியாக வரும், பிரகாஷ்ராஜ், சர்வாவின் முன்னேற்றத்துக்கு வழி காட்டும் ஜெயபிரகாஷ் என மற்ற கதாபாத்திரங்களும் தேவையறிந்து அளவுடன் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

படத்தின் பாதிவரை, இது சேரன் படம் தானா என்கிற சந்தேகத்துடன் கொஞ்சம் ஹைடெக்காகவே நகரும் படம், இடைவேளைக்குப்பின் அவரது பாணியை உறுதி செய்கிறது. இறுதிக்காலத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஒரு இளைஞனின் பயணம் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடுவதால், கதை எந்தவித திருப்பங்களும் இன்றி மெதுவாகவே நகர்கிறது.

தவிர ஹீரோவின் தடாலடி டெவலப்மென்ட்டுகள் அனைத்தும் சினிமாத்தனமாகவே இருப்பது மைனஸ். அதனால் சேரனின் வழக்கமான உணர்வுப்பூர்வமான படம் என்கிற எதிர்பார்ப்பு நிறைவேறாமலேயே போய்விடுகிறது. ஆனால் நட்புகளையும், உறவுகளையும் பெருமைப்படுத்தியுள்ள படம் என்பதையும் மறுப்பதிற்கில்லை. படத்தை சேரனின் படமாக பார்க்காமல், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கையாக பார்த்தால் இது ஒரு நல்ல படைப்புதான்.