ஜித்தன்-2 விமர்சனம்

jithan-2 09 (1)

சூப்பர்ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் தற்போதைய ட்ரெண்டில் வந்திருக்கும் புதிய வரவுதான் இந்த ‘ஜித்தன்-2’.

சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்த ‘ஜித்தன்’ ரமேஷ், வெளிநாடு சென்று சம்பாதித்து வந்து, தந்தையின் கடைசி ஆசைப்படி தனது சொந்த ஊரான கொடைக்கானலில் அழகிய பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறுகிறார். ஆனால் அவர் உள்ளே நுழைந்த நாள் முதல், அங்கே இருக்கும் பேய் ஒன்று அவரை வெளியே துரத்துவதற்காக விதம்விதமாக டார்ச்சர் பண்ணுகிறது..

ஒருகட்டத்தில் அலுப்பாகிப்போய் வீட்டை விற்றுவிடலாம் என ரமேஷ் முயற்சி செய்யும் நேரத்தில், அந்த பேய் அது தன்னுடைய வீடு என உரிமை கொண்டாடுவதுடன், வாங்க வருபவர்களையும் பயமுறுத்தி விரட்டுகிறது. அந்த பேயை வீட்டை விட்டு துரத்த முயலுகையில், அது தன்னுடைய பிளாஸ்பேக்கையும், தான் வீட்டை விட்டு செல்லாமல் அங்கேயே உலாவுவதற்கான காரணத்தையும் ஜித்தன் ரமேஷிடம் சொல்கிறது. அது என்ன காரணம், ஜித்தன் ரமேஷால் பேயின் மனக்குறையை தீர்க்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

பழிவாங்கும் பேயாக இல்லாமல் பாவப்பட்ட பேயை காட்டி, இடைவேளை வரை அப்படி இப்படி மிரட்ட முயற்சிக்கிறார்கள்.. பேய்க்கு பயந்து நடுங்கும், அதேசமயம் வெட்டி வீராப்பு காட்டும் கேரக்டரில் ஜித்தன் ரமேஷ் கரெக்ட்டாக பொருந்துகிறார்.. கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே, பேயாக வந்து மிரட்டுவதற்கு பதில் நம்மை மயக்க முயற்சிக்கிறார்.. ஆனால் இடைவேளைக்கு முன்புவரை சிருஷ்டிக்கு பதிலாக எதற்காக அப்படி ஒரு அகோரமான பேயை காட்டினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

பேய் மனிதர்களுடன் பேசிக்கொண்டு ஊரைச்சுற்றி வரும் மயில்சாமி, ஆரம்பத்தில் போலீஸாக வந்து காமெடி பண்ண முயற்சிக்கும் ரோபோ சங்கர் இவர்களைவிட, இறுதிப்பகுதியில் ஆந்திர ரவுடி கெட்டப்பில் கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார் யோகிபாபு. பிரமாண்ட பங்களா, இரவில் மட்டுமே வரும் பேய் என வழக்கமான கிளிஷேக்கள் தான் இதிலும். அதிலும் சிருஷ்டியை பாவப்பட்ட பேயாக காட்டுவதில் இருந்து படத்தின் டெரர் மூட் குறைந்துவிடுவது பலவீனம்.

ஸ்ரீகாந்த் தேவா (ஸ்ரீ) பின்னணி இசையில் ரசிகர்களை கொஞ்சம் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். கதையில் விறுவிறுப்பு கூட்ட வின்சென்ட் செல்வா மெனக்கேட்டதாகவும் தெரியவில்லை.. அதை காட்சிப்படுத்தியத்தில் இயக்குனர் ராகுல் பரமஹம்சா துடிப்பு காட்டியதாகவும் தெரியவில்லை.. பேய்ப்பட சீசனில் வந்திருக்கும் மற்றும் ஒரு படம் என்கிற அளவிலேயே நம்மை குறைந்த அளவில் ஈர்க்கிறது இந்த ‘ஜித்தன்-2’.