ஜிப்பா ஜிமிக்கி – விமர்சனம்

க்ரிஷ் திவாகர், குஷ்பு பிரசாத் இருவரின் தந்தைகளும் ஆத்மார்த்தமான நண்பர்கள். ஆனால் வாரிசுகள் இருவரும் ஒருவருக்கொருவர் முறைத்துக்கொள்ளும் சண்டைக்கோழிகள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு குஷ்பு மறுக்கிறார்..

இதற்கிடையே உடன் வேலைபார்க்கும் நண்பனின் திருமணத்துக்காக கூர்க் செல்கிறார்கள் இவர்கள் இருவரும்.. போகும் வழியிலும், போன இடத்திலும், திரும்பிவரும் வழியிலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக சண்டைபோட்டுக்கொண்டே வரும் இருவரும் ஒருகட்டத்தில் தங்களுக்குள் உள்ள காதலை உணர்கிறார்கள்.. ஆனால் இவர்கள் காதலுக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்படுகிறது.. காதலர்கள் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

புதுமுகம் க்ரிஷ் திவாகர் ஆள் பார்க்க நன்றாக இருந்தாலும் நடிப்பில் இன்னும் வெகுதூரம் போகவேண்டும். ஆனால் குஷ்பு பிரசாத் நடிப்பிலும் அழகிலும் பாஸ்மார்க்கை தாண்டி வாங்கிவிடுகிறார். ஆடுகளம் நரேன், அவரது நண்பர், இளவரசு என சீனியர்கள் தங்கள் நடிப்பின் எல்லைக்குள் பயணித்திருக்கிறார்கள்.. அட.. ‘மொட்டை’ ராஜேந்திரன் ‘ஜிப்பா போட்ட மைனரு’ என மாட்டு வண்டியோட்டியபடி பாட்டுப்பாடி அசத்துகிறார்.

பக்கத்தில் இருக்கும் நாயகனும் நாயகனும் வேறு யாருடனோ போனில் பேசுவதுபோல தங்களுக்குள் உரையாடுவது சுவாரஸ்யம். எதிரும் புதிருமாக உள்ள ஆணும் பெண்ணும் காதலர்களாக மாறுவதுதான் கதை என முடிவான பின்னர் அதற்கான வலுவான காட்சிகளை அமைத்திருக்கலாமே.. க்ளைமாக்ஸில் வில்லன், கத்திக்குத்து என படத்தை இழுக்காமல் பதவிசாக முடித்திருக்கலாம்.