ஜில் ஜங் ஜக் – விமர்சனம்

Jil-Jung-Juk poster
போலீஸ் கண்களில் மண்ணை தூவுவதற்காக போதைப்பொருளை ஒருவித கெமிக்கலில் மிக்ஸ் செய்து பெயின்ட்டுடன் சேர்த்து ஒரு பழைய மாடல் காருக்கு அடித்து, அதை குறிப்பிட்ட ஆட்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை சித்தார்த்திடம் ஒப்படைக்கிறார் கடத்தல்காரரான அமரேந்திரன்.. ‘ஜில்’லாகிய சித்தார்த் மற்றும் அவரது நண்பர்களாகிய ஜங், ஜக் மூவரும் இந்த வேலையை ஒப்புக்கொண்டு களத்தில் இறங்குகிறார்கள்..

போகும் வழியில் இவர்கள் அசந்த நேரத்தில் கார் கடத்தப்படுகிறது. சினிமா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்டு உடைக்கப்படுகிறது. இப்போது எதிர் பார்ட்டியிடம் கொடுப்பதற்காக அதே போல இன்னொரு காரை அதேபோல பெயின்ட் மற்றும் கொஞ்சம் போதைப்பொருளை கலந்து அடிக்க முடிவுசெய்கிறார்கள் சித்தார்த் அன் கோ..

அதற்கு தேவைப்படும் போதைப்பொருளை வாங்குவதற்காக செல்லும் வழியில் ‘ரோலக்ஸ் ராவுத்தர்’ என்கிற தாதா ராதாரவியின் பெட்ரோல் பங்க்கை தெரியாமல் எரித்து விடுகிறார்கள்.. போதைப்பொருள் வைத்திருக்கும் ‘அட்டாக்’ என்கிற தீனாவிடம் இருந்து கொஞ்சமாக சரக்கை கடத்திக்கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள்.. இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி, அனைத்து கும்பலும் ஒரே இடத்தில் ஒன்றுகூடும்போது மோதல் வெடிக்கிறது.. ஜில், ஜங், ஜக் கதி என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்..

படம் முழுவதும் உங்களை சிரிக்கவைக்கவேண்டும் என முடிவு செய்து, அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சித்தார்த்த அன் கோவின் வித்தியாசமான கெட்டப்பும், அவர்களது தத்து ஐடியாக்களும் கோமாளித்தனமான புத்திசாலித்தனமும் அதை ஒர்க் அவுட் பண்ண முயற்சிசெய்து சிக்கலை இழுத்துக்கொள்வதுமாக காட்சிக்கு காட்சி கவனத்தை ஈர்க்கின்றனர்.. சித்தார்த் ஹீரோயிசம் எதுவும் காட்டாமல் கதையின் போக்கில் கேரக்டர்களில் ஒருவராக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

ரோலக்ஸ் ராவுத்தராக வரும் ராதாரவியின் கேரக்டரும் கெட்டப்பும் அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் புதுசு தான்.. படத்தில் வரும் நாசர், ஆர்.எஸ்.சிவாஜி, பகவதி பெருமாள், சாய்தீனா, அவினாஷ் ரகுதேவன் (ஜங்), சனந்த் (ஜக்) மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டதுடன், தங்கள் பங்கிற்கும் நம்மை ஏதோ ஒருவிதத்தில் சிரிக்க வைக்கிற வேலையயும் சரியாக செய்திருக்கிறார்கள்..

ஸ்ரேயா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இன்றைய காலகட்டத்தை மறக்கடித்து, நம்மை 2020 என்கிற புதிய உலகிற்கு அழைத்து செல்கிறது.. கௌபாய் படங்களில் வரும் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதிபோல கிட்டத்தட்ட நம்ம ஊரையே மாற்றி இருப்பது, புது உணர்வை தருவதுடன் சபாஷ் சொல்ல வைக்கிறது. விஷால் சந்திரசேகரின் இசையின் அதற்கு பின்னணி இசையுடன் ஒத்து ஊதியிருக்கிறது.

அறிமுக இயக்குனர், இளைஞர் தீரஜ் வைத்தி, தமிழ்சினிமாவில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதும் அதை ஒரு தயாரிப்பலராகவும் நடிகராகவும் சித்தார்த் ஊக்கப்படுத்தி இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்.. ஒரு குறிப்பிட்ட வகை ஆடியன்ஸ்க்கு இது கதையும் கதைகளமும் ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்புவது போல தோன்றுவது படத்தின் முக்கியமான மைனஸ் பாயின்ட். ஆனாலும் அதுகூட போகப்போக சரியாகி விடுகிறது. ஆனாலும் இந்த புதிய முயற்சியை பாராட்டித்தான் ஆகவேண்டும்.