ஜீவி – விமர்சனம்

8 தோட்டாக்கள் என்கிற கவனிக்கத்தக்க படத்தை தயாரித்த நிறுவனமும் அதில் நடித்த ஹீரோ வெற்றியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் இந்த ஜீவி.

ஊரில் விவசாயம் பொய்த்துப் போனதால் தந்தையின் பாரத்தை குறைப்பதற்காக வேறுவழியின்றி சென்னைக்கு வேலை தேடி வருகிறார் வெற்றி. எந்த வேலையும் அவர் மனதிற்கு திருப்தி தராமல் போகவே ஒரு கட்டத்தில் கருணாகரன் வேலை பார்க்கும் டீக்கடையில், ஜூஸ் பிழியும் வேலை கிடைக்கிறது. எதிர் கடையில் வேலை பார்க்கும் நாயகியின் காதல் பார்வை அவரை அந்த வேலையை விட்டும் அந்த ஊரை விட்டுப் போகாமல் அங்கேயே நீடிக்க வைக்கிறது. வெற்றியும் கருணாகரனும் ரோகிணிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றனர்.

கண் தெரியாத மகள், படுத்த படுக்கையாய் கிடக்கும் கணவர் என சிரமப்படும் ரோகிணி, தனது மகளின் திருமணத்திற்காக நகைகள் சேர்த்து வைக்கிறார். ஒரு சிறிய எதிர்பாராத நிகழ்ச்சி மூலம் அவர் வீட்டு பீரோவின் இன்னொரு சாவி வெற்றியின் கைக்கு கிடைக்கிறது. பீரோவில் இருக்கும் நகைகளை திருடி அதன் மூலம் பெரிய ஆளாகலாம் நினைத்து கருணாகரணுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். அதை வெற்றிகரமாக செயல்படுத்தி நகைகளைத் திருடவும் செய்கிறார்.

போலீசார் எவ்வளவு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியும் கூட தான் படித்த புத்தகங்களின் மூலம் தனக்கு கிடைத்த அறிவை பயன்படுத்தி போலீசாரின் சந்தேகம் சந்தேகத்தை வேறு பக்கம் திருப்பி விடுகிறார். இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வரும் ரோகிணியின் தம்பி மைம் கோபி வெற்றி, கருணாகரன் மீது சந்தேகப்பட அதையும் சமாளிக்கிறார்.

இதை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ரோகிணி குடும்பத்தை பற்றிய எதிர்பாராத ஒரு உண்மை வெற்றிக்கு தெரியவருகிறது. இதனால் அதிர்ந்துபோன வெற்றி எதிர்பாராத ஒரு முடிவு எடுக்கிறார். இந்த புதிய முடிவால் கருணாகரனுக்கும் வெற்றிக்கும் தகராறு. எழுகிறது இறுதியில் என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்

புதுமுகங்கள் அறிமுகமாகும்போது ஹீரோ என்கிற பந்தா இல்லாமல் கதையுடன் இயல்பாக ஒன்றிப்போய் கதையின் நாயகனாக மாறினால் அவர்களை நம்மால் ரசிக்க முடியும் என்பதற்கு உதாரணம் இந்த படத்தின் நாயகன் வெற்றி. அந்த அளவிற்கு தனது கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். இன்னொரு ஹீரோ என சொல்வது போல கருணாகரனுக்கும் காமெடி குணச்சித்திரம் என கலந்து இந்தப்படத்தில் சரி சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அவரும் அதை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இரண்டு கதாநாயகிகளை விட வீட்டு ஒன்றாக வரும் ரோகிணி மற்றும் வெற்றியின் அம்மாவாக வரும் ரமா ஆகியோர் அதிகப்படியான காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை செய்து ரசிக்க வைக்கிறார்கள். கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக அனில் முரளி மிரட்டுகிறார். இது போதாதென்று மைம் கோபி தன் பங்கிற்கு இன்னும் டெரர் ஏற்றுகிறார்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை திரில் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. ஒரு சிறிய அறையை கூட எத்தனை விதமான கோணங்களில் காட்டலாம் என பிரமிப்பு ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார். அதே போல படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு எந்தவிதத்திலும் குழப்பத்தை தந்து விடாதபடி அழகாக படத்தை தொகுத்திருக்கிறார் எடிட்டர் பிரவீண்.

அறிமுக இயக்குனர் விஜே.கோபிநாத் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட ஏற்படாமல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாக கணக்கிட்டு, எந்த இடத்திலும் லாஜிக் மீறாமல் காரண காரியங்களுடன் அதேசமயம் அறிவியல் தொடர்பியல் நிகழ்வுகளுடன் சம்பந்தப்படுத்தி நம்மை ஒரு எதிர்பார்ப்புடனேயே படம் முழுதும் பயணிக்க வைத்திருக்கிறார். அதற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும்..

எங்கோ ஏதோ ஒரு இடத்தில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும் என்பதை மையமாக வைத்து அழகாக திரைக்கதை அமைத்துள்ளார் கோபிநாத். படத்தின் வசனகர்த்தா பாபு தமிழ் ஒவ்வொரு வசனங்கள் மூலம் நம்மை கவனிக்க வைக்கிறார். சமீபகாலத்தில் வந்த படங்களில் ரொம்பவே புத்திசாலித்தனமான திரைக்கதையை கொண்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

டைட்டிலை பார்த்துவிட்டு, பிரபலமில்லாத ஹீரோவின் முகத்தை போஸ்டரில் பார்த்துவிட்டு இது சின்ன படம் தானே என நினைத்து ஒதுக்கிவிட்டு பெரிய நடிகர்களின் படத்தை தேடி செல்பவர்கள், ஒரு அருமையான விறுவிறுப்பான, சூப்பரான படத்தை தவற விட்டு விடுவார்கள் என்பது மட்டும் உறுதியாக சொல்லலாம்.