ஜடா – விமர்சனம்

வடசென்னை பகுதிதான் கதைக்களம்ல்.. ஏழு பேர் விளையாடும் கால்பந்து விளையாட்டை தங்களது கவுரவமாக நினைத்து அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் மனிதர்களை பற்றிய கதை தான் இது.

கால்பந்து வீரரான கதிர் (ஜடா) தனது கோச்சின் ஆலோசனைப்படி உள்ளூர் போட்டிகளில் பங்கெடுத்து விளையாடி வருகிறார். ஒருகட்டத்தில் பத்து வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஏழு பேர் விளையாடும் கால்பந்து போட்டியை நடத்த முற்படுகிறார் அந்த ஏரியா தாதா.. கதிர் அந்த போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்ட அவரது கோச்சோ அதை கடுமையாக எதிர்க்கிறார்.. ஏற்கனவே அந்தப்போட்டியில் கலந்துகொண்ட மிகத்திறமையான கோச்சான கிஷோர் தனது உயிரை இழந்திருக்கும் நிகழ்வை மறக்காத கதிர், இந்தப் போட்டியில் விளையாடி வெற்றி பெறுவதன் மூலம் இந்தப் போட்டி இனி தொடராமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் ..

ஆனால் உள்ளூரில் நடக்கும் காலிறுதிப் போட்டிகளில் பிரச்சினை ஏற்பட்டதால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை கிஷோரின் பிறந்த ஊரிலேயே நடத்துவதற்கு முடிவு செய்யப்படுகிறது. இதற்காக அந்த ஊருக்குச் செல்லும் கதிர் அண்ட் கோ டீம் எதிர்கொள்ளும் வித்தியாசமான அனுபவங்கள்தான் மீதிக்கதை.. இறுதிப்போட்டி வரை கதிர் அணியால் தாக்குப்பிடிக்க முடிந்ததா..? கதிர் தான் நினைத்ததை சாதித்தாரா என்பது கிளைமாக்ஸ்…

கால்பந்தை மையப்படுத்தி சமீபத்தில் தான் விஜய் நடித்த பிகில் படம் வந்து சென்றுள்ள நிலையில் மீண்டும் ஒரு கால்பந்து படமா என தயங்கிக்கொண்டே தியேட்டரில் நுழைபவர்களுக்கு அது வேறு, இது வேறு என ஆரம்பத்திலேயே கோடிட்டுக் காட்டி விடுகிறது இந்த ஜடா.. மற்றபடி விளையாட்டு போட்டிகளுக்கே உண்டான எதிர்ப்பு மனப்பான்மை, துரோகங்கள், கோபங்கள் அனைத்தும் இந்தப்படத்திலும் இருக்கின்றன. ஆனால் படத்தின் பிரதான கதை ஏழு பேர் கொண்ட போட்டியில் மட்டும் செல்வதோடு அல்லாமல் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியிருக்கிறது.. குறிப்பாக இடைவேளைக்கு பிறகு படம் அப்படி வேறு ஒரு திசையில் போகும் என படம் பார்ப்பவர்களால் யூகிக்க முடியாது என்பது படத்திற்கான திருப்பமா அல்லது படத்தின் மைனஸா என்பதை படம் பார்ப்பவர்கள் முடிவுக்கே விட்டுவிடுவோம்.

நாயகன் கதிர் நாளுக்கு நாள் தனது நடிப்பில் மெருகேறிக்கொண்டே வருகிறார்.. நல்ல கதைகளை தேர்வு செய்து அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துவருகிறார் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம். அவருடன் யோகி பாபு படம் முழுக்க எல்லோரையும் கலாய்த்துக் கொண்டு ஓரளவுக்கு காமெடி பண்ணி கலகலப்பாக படத்தை கொண்டு செல்ல உதவுகிறார். குறிப்பாக இவனெல்லாம் கால்பந்து விளையாட வந்துவிட்டான் என கிண்டலடிக்கும் சிறுவனுக்கு செமையாக பதிலடி கொடுக்கும் காட்சியில் கைதட்டலை அள்ளுகிறார் யோகி பாபு. ஒரு காட்சியில் நடிகர் விஜய்யை கலாய்த்து இருப்பது தான் செம ஷாக்.

கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ்.. எண்ணி நாளை நாலே காட்சிகளில் மட்டுமே வந்துவிட்டு போகிறார்.. நடிப்பை விட அழகாய் இருக்கிறார் என்பதே உண்மை.. கதிர் அணியில் உள்ள ராஜ்குமார் உள்ளிட்ட மற்றவர்கள் தங்கள் பங்கிற்கு கலாட்டா செய்து தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் கதைக்கு மையப்புள்ளி கதாபாத்திரமாக, கால்பந்து கோச்சாக கிஷோர் நேர்த்தியான தேர்வு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. எந்த விளையாட்டுக்கு வேண்டுமானாலும் அவர் கோச்சாக இருப்பதற்கு, இல்லையில்லை நடிப்பதற்கு தகுதியான ஒரு நடிகராக அடையாளப்படுத்தப்பட்டு விட்டார்.

ஓவியர் ஏபி..ஸ்ரீதர் இந்தப் படத்தின் மூலம் வில்லன் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரலாம். கதிரின் கோச் மற்றும் வரத்து மகன் இருவரின் நடிப்புமே சிறப்பு.. சாம் சி.எஸ் என்றாலே பின்னணி இசையில் மட்டும்தான் ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமா என்ன..? பாடல்களிலும் கவனம் செலுத்திலாமே.? ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவில் கிராமத்து இரவு காட்சிகளும் கால்பந்து விளையாட்டு காட்சிகளும் செம விறுவிறுப்பு..

அறிமுக இயக்குனர் குமரன் ஏழு பேர் கொண்ட கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் அதனூடாக நடக்கும் சூதாட்டம், உயிர்பலி ஆகியவற்றையும் படமாக்க முயற்சித்திருப்பதில், அட இது புதிய விஷயமாக இருக்கிறதே என்று தோன்றியது.. ஆனால் இடைவேளைக்கு பிறகு கதையை கிராமத்திற்கு நடத்திச்சென்றவர் கதைக்களத்தை விளையாட்டில் இருந்து ஹாரர் பின்னணிக்கு மாற்றியதை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஒருவேளை விளையாட்டை மையமாக வைத்தே முழுப்படத்தையும் நகர்த்த முடியாது என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.. திடீரென பேய் கதைக்குள் நம்மை அழைத்துச் சென்று திக்குத் தெரியாமல் அலைய விட்டு விடுகிறார்.. திகில் காட்சிகள் நமக்கு பயம் கூட்டினாலும், படத்தோடு ஒட்டாமல் இருப்பது பலவீனமே.. இருந்தாலும் இந்த ஜடாவை பார்த்து ரசிப்பதில் ரசிகர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்று சொல்லலாம்.