“என் படத்தையே ரிலீஸ் செய்யவிடாமல் தொல்லை கொடுத்தார்கள்” ; விஷால்

irumbu thirai success meet (1)

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால், அர்ஜூன், சமந்தா நடித்த இரும்புத்திரை படம் கடந்த மே-11ஆம் தேதி வெளியானது.. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். ரோபோ சங்கர், காளி வெங்கட், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் இன்று மக்கள் எதிர்கொண்டுள்ள டிஜிட்டல் அபாயத்தை பற்றி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக உருவாகியுள்ளது.

இதனாலேயே பொதுமக்களிடம் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் சந்திப்பிற்கு ஏற்பட்டு செய்திருந்தனர் ‘இரும்புத்திரை’ படக்குழுவினர்.. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷால், அர்ஜூன், காளி வெங்கட், ரோபோ சங்கர், படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் உமேஷ், வசனகர்த்தாக்கள் பொன் பார்த்திபன், ஆண்டனி பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நன்றி தெரிவித்து பேசிய விஷால், “இந்தப்படத்தில் சில காட்சிகளில் நான் நடிக்கவேயில்லை.. இயல்பாகவே ரியாக்ட் செய்திருந்தேன்.. பேங்கிலிருந்து பணம் வசூலிக்க வந்த ஏஜெண்டை அடிக்கும் கட்சியில் நிஜமாகவே அவரை அடித்தேன். அந்த அளவுக்கு நான் பாதிக்கப்பட்டு இருந்தேன்.. நிச்சயம் பத்துல எட்டு பேரு அப்படி பாதிக்கப்பட்டு இருப்பாங்க.. அவங்ககிட்ட இது நல்லா ரீச் ஆகும்னு தெரியும்..

இந்தப்படம் கிட்டத்தட்ட மூணு வருஷம் தயாரிப்பில் இருந்துச்சு.. படம் தாமதமாகும்போது எனக்குத்தான் சிரமம்.. அது நல்லாவே தெரியும். ஆனால் இந்த இடைவெளியில மித்ரனும் அவரோட டீமும் அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை இன்னும் மெருகேத்திக்கிட்டேதான் இருந்தாங்க. அப்படி இடைவேளைக்கு பின்னாடி தயாரான போர்ஷனை பார்த்துட்டு நானே வில்லனா நடிக்க விரும்பினேன். இப்போ இரும்புத்திரை பார்ட்-2 எடுக்கிற ஐடியாவும் இருக்கு.

இந்தப்படத்துல கதாநாயகியாக நடித்த சமந்தாவுக்கு நிச்சயம் நன்றி சொல்லியே ஆகணும்.. திருமணம் ஆன பின்னாடி நடிகைகள் நடிக்க மாட்டாங்க.. இல்லைன்னா அவங்களுக்கு வாய்ப்பு வராது அப்படிங்கிற ஒரு கருத்தை அடிச்சு உடைச்சிருக்கார்.

இந்தப்படத்துல வில்லனா நடிக்க ஆர்யா கிட்டதான் அணுகினோம்.. ஆனால் அவர் இது தனக்கு சரியா வராதுன்னு சொல்லிட்டார்.. இயக்குனர் மித்ரன் தான், அர்ஜூன் சார்கிட்ட கேட்கலாம்னு சொன்னார்.. நான் என் பேரை சொல்லாம, எங்கிட்ட கதை சொன்னதா சொல்லாம, அர்ஜூன் சார்கிட்ட பேசுங்கன்னு அனுப்பி வச்சேன். ஏன்னா என்னை ஹீரோவா மாத்தினவரை, நான் எப்படி வில்லனா மாத்துறது அப்படிங்கிற பயம் தான். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன், நிறைய விஷயங்களை படத்தில் சேர்க்க அருமையான ஆலோசனைகளையும் கொடுத்தார்.

இந்தப்படம் ரிலீஸ் ஆகிறதுக்கு முன்னாடியே பாதிப்படத்தை பத்திரிகை நண்பர்களுக்கு திரையிட்டு காண்பித்தோம்.. அது படத்தின் மேல் நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையால்.. இனி வரும் எனது அடுத்த படங்களை ரிலீஸ் தேதிக்கு இரண்டு வாரம் முன்னதாகவே பாதிப்படத்தை திரையிட்டு காட்டவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

இந்தப்படத்துல ஆதார், டிஜிட்டல் விஷயங்களை சொல்லியிருக்கீங்களே அப்படின்னு கேட்குறாங்க..? ஏன் சொல்லக்கூடாதுன்னு நான் தைரியமா சொன்னேன்.. இந்த சமூகம் சார்ந்த விஷயம்.. அதுல தப்பு இருந்துச்சுன்னா அது தப்பு தான்… சென்சார் சான்றிதழ் கொடுத்த பின்னாடி நாங்க ஏன் பயப்படனும்..? தயவுசெய்து இனிமே சினிமாவுக்கு எதிரா போராட்டம் பண்றவங்க பேசாம வள்ளுவர் கோட்டத்துலயோ இல்லை சாஸ்திரி பவன் முன்னாடியோ போய் போராட்டம் பண்ணுங்க…

இரும்புத்திரை படம் வெளிவரக்கூடாது என பலர் பல வேலைகள் செய்தார்கள். கடந்த 10ம் தேதி இரவு என் வாழ்க்கையை மறக்கவே முடியாது. என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாள் என்று கூட சொல்லலாம். தயாரிப்பாளர் சங்க தலைவரான என் படத்தையே சுத்தலில் விட்டார்கள். பணத்தோட அருமை என்னவென்று எனக்கு புரிய வைத்தார்கள். பட வெளியீட்டு நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி.. நீங்க என்ன ஆட்டம் போட்டாலும் சரி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்றுமே நேர்மையாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டியது தான் எங்கள் வேலை” என உணர்ச்சிகரமாக பேசினார் விஷால்