இரும்புத்திரை – விமர்சனம்

irumbu thirai review

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள படம் தான் ‘இரும்புத்திரை’.

சென்னையில் மிலிட்டரி ஆபீசராக இருக்கும் விஷால், கோபக்காரர். அதனால் அவரை மனநல மருத்துவரான சமந்தாவிடம் பிட்னெஸ் சான்றிதழ் வாங்கிவரும்படி உயரதிகாரி உத்தரவிடுகிறார். கவுன்சிலிங்கில் ஒரு பகுதியாக சமந்தாவின் அறிவுரைப்படி ஊரில் இத்தனை நாளாக பார்க்காமல் இருந்த அப்பாவையும் தங்கையையும் பார்த்துவர செல்கிறார் விஷால். அப்போதுதான் தங்கையின் திருமணம் பணத்தால், தடைபட்டு நிற்பது தெரிய வருகிறது..

நிலத்தை விற்றத்தில் கிடைத்த பணம் போக, மீதியை வங்கியில் லோன் போட்டு ஏற்பாடு செய்கிறார்.. ஆனால் பணம் கணக்கில் ஏறிய சில மணி நேரங்களிலேயே மொத்தப்பணமான பத்து லட்சமும் கணக்கில் இருந்து யாராலோ ஆன்லைன் மூலமாக களவாடப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடையும் விஷால், இதன் பின்னணியில் இருப்பது யார் என துருவ ஆரம்பிக்கிறார்.

தான் மட்டுமல்ல, பலரும் இதுபோல பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் இதன் பின்னால் டிஜிட்டல் டெக்னாலஜியில் மன்னனான இருக்கும் அர்ஜூன் இருப்பதும் தெரியவர, அவரை நெருங்க முயற்சிக்கிறார். ஆனால் அது தனது தங்கையின் வாழ்க்கைக்கு உலைவைத்துவிடும் என அறிந்து அதிர்ச்சியாகிறார். இறுதியில் அர்ஜுனை விஷால் நெருங்க முடிந்ததா..? இதற்காக அவர் சந்தித்த இழப்புகள் என்ன என்பது மீதிக்கதை.

அதிரடி சரவெடி கேரக்டரில் விஷால் செம.. ஆரம்பகட்ட பில்டப் காட்சிகள் சற்றே அயர்ச்சியை தந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளிலும், இடைவேளைக்குப்பின் வரும் சேசிங் காட்சிகளிலும் வேகம் எடுத்திருக்கிறார். இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுக்கும் அர்ஜூன் அசத்தலான வில்லன் முகம் காட்டுகிறார். அவரது கேரக்டரை சமரசம் செய்துகொள்ளாமல் வடிவமைத்திருப்பதை பாராட்டலாம். விஷாலுக்கும் அர்ஜுனுக்குமான டிஜிட்டல் சேசிங் பரபரக்க வைக்கிறது..

சிம்பிள் அன்ட் க்யூட்டாக, இலையில் வைத்த ஸ்வீட்டாக சமந்தா. ஹீரோவுக்கு உதவும் வீரதீர பராக்கிரம பெண்மணியாகவும் அசத்துகிறார். ரோபோ சங்கரின் எக்ஸ்ட்ரா வால்களை எல்லாம் வெட்டி இருப்பதாலோ என்னவோ நீண்ட நாளைக்குப்பின் இதில் அவரது காமெடி இயல்பாக ரசிக்கும்படியாக இருக்கிறது. தந்தையாக டெல்லிகணேஷ் வழக்கம்போல.

பாடல்கள் மூலம் படத்தின் விறுவிறுப்புக்கு தடைபோடமல் பின்னணி இசையில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு மிரட்டல். இன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில் ஒவ்வொரு மனிதனின் பணமும் அந்தரங்கமும் அவனை அறியாமல் எப்படி களவாடப்படுகிறது, அதற்கு யார் துணை போகிறார்கள் என்பதை காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார் இயக்குனர் மித்ரன். தவிர பேஸ்புக், வாட்ஸ் அப், போகிற இடங்களில் கூப்பன்களை நிரப்பி கொடுப்பது என நம்மை பற்றிய தகவல்களை நம்மையறியாமலேயே எப்படி வெளிநபர்களுக்கு தாரைவார்த்து தருகிறோம் என்பதை பார்க்கும்போது நிஜமாகவே மொபைல் போன் மீது பயம் வரவே செய்கிறது.

ஆரம்ப காட்சிகள் ஒன்றிரண்டு ஏற்கனவே வந்த சில படங்களின் காட்சிகளை நினைவூட்டுகிறது.. யாராலோ பணம் களவாடப்பட்டதற்காக விஷால் தன் தந்தையிடம் அவ்வளவு கோபப்படுவது ஓவர். வங்கிக்கடன் வசூலிக்க வந்தவனை புரட்டி எடுக்கும்போது ஒரு மன நிறைவு ஏற்படுகிறது. இப்படி சிற்சில குறைகளும் பல நிறைகளுமாக ரசிகர்களுக்கான படமாக இந்த இரும்புத்திரை கமர்ஷியல் பேக்கேஜாக வெளியாகி இருக்கிறது.