இருக்கு ஆனா இல்லை – விமர்சனம்

உங்கள் வீட்டுக்கு வரும் ஆவி அல்லது பேய் உங்களை மிரட்டாமல், உங்களிடம் உதவி கேட்டு நண்பனாக மாறி, காதலியாகவும் மாறினால் எப்படி இருக்கும்..? அதுதான் இந்தப்படம்.. ஆவியாக வரும் கதாநாயகி ஈடன் இறக்கும் முன் கடைசியாக பார்த்த நபர் தான் கதாநாயகன் விவந்த். அதனால் தான் யார் என கண்டுபிடித்து தரச்சொல்லி விவந்த்திடம் உதவி கேட்கிறார்..

ஆரம்பத்தில் மிரட்சியாகும் விவந்த் பின் துப்பறியும் வேலைகளில் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் ஆவியின் மேல அவருக்கு காதலும் ஏற்பட தனது நிறுவனத்தில் கிடைக்கும் வெளிநாட்டு வாய்ப்பையும் ஒதுக்குகிறார்.. இந்த நேரத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் ஆவியின் தங்கைக்கு டாக்ரால் ஏற்பட இருக்கும் அபாயம் தெரியவர அதை தடுக்க போராடுகிறார் விவந்த்.. ஆவியின் தங்கையை காப்பாற்றினாரா, ஆவியுடனான காதல் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.

சாப்ட்வேர் இன்ஜினியராக வரும் விவந்த்தின் முக்கலும் முனகலும் ஆரம்பத்தில் நம்மை சோர்வடைய செய்தாலும், ஆவியுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தபின் கலகலப்பூட்டுகிறார். ஆவி அளித்த தன்னம்பிக்கை டானிக்கால் தனது நடை உடை பாவனையை மாற்றிக்கொண்டாலும் அவரது முதல் கெட்டப் தான் பார்க்க நன்றாக இருக்கிறது. இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ஈடன் அழகான ஆவி. ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ ஆதவன் இதில் முழு நேர காமெடியனாக புரமோஷன் ஆகியிருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன் கூட ஜஸ்ட் லைக் தட் வந்து போகிறார்.

ஆவியுடன் காதல் என்கிற புதிய கோணத்தில் யோசித்திருக்கிறார் இயக்குனர் கே.எம்.சரவணன். சில பல ட்விஸ்ட்டுகளுடன் இடைவேளைக்குப்பின் படம் கொஞ்சம் சூடு பிடிக்கிறது. ஆனால் அழுத்தமான கதை இல்லை என்பதும் காட்சிகளில் சுவராஸ்யம் கூட்டியிருக்கலாம் என்பதும் தான் குறையாக தெரிகிறது. கதையில் சுவராஸ்யம் ‘இருக்கு’.. ‘ஆனா’ காட்சிகளில் வேகம் ‘இல்லை’..