இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின்போது செயலிழக்க செய்யப்படாமலேயே கடலில் வீசப்பட்ட குண்டுகள் மீண்டும் கரை தேடி வந்தால்..?

அப்படி கரை ஒதுங்கிய குண்டு ஒன்று அது என்னவென்று தெரியாமலேயே மாரிமுத்து நடத்தும் காயலான் கடைக்கு வருகிறது. அதன்பிறகு அங்கே ட்ரைவராக வேலை பார்க்கும் அட்டகத்தி தினேஷ் மூலமாக லாரியில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு பயணிக்கிறது.. இந்த நிலையில் அப்படி ஒரு வெடிகுண்டு கரை ஒதுங்கிய விஷயமறிந்த, ராணுவ தளவாடங்களை சப்ளை செய்த நிறுவனம் தங்களுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் போலீஸ் மூலமாக அதை கைப்பற்ற நினைக்கிறது.

ஆனால் அதே போன்ற ஒரு குண்டு வெடித்ததால் பல வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தை இழந்த ரித்விகா அந்த குண்டு பற்றிய தகவலைக் கேள்விப்பட்டு அதை போலீசாரிடம் சிக்க விடாமல் அமைதிக்குழு மூலமாக அரசாங்கத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முயல்கிறார். இதற்கிடையே தினேஷ் ஆனந்தி காதல் பிரச்சினையும் சேர்ந்துகொள்ள போலீசாரிடமிருந்தும் ஆனந்தியின் குடும்பத்தினரிடமிருந்தும் தினேஷால் தப்பிக்க முடிந்ததா..? ரித்விகாவால் போலீசாரின் கைகளில் அந்த குண்டை சிக்கிவிடாமல் கைப்பற்ற முடிந்ததா..? அதுவரைக்கும் அந்த குண்டு வெடிக்காமல் இருந்ததா..? என பரபரப்பாக கேள்விகளுக்கு மீதி படம் விடை சொல்கிறது.

நிச்சயமாக முற்றிலும் புதிய கதைக்களத்தில் தான் இந்த படம் உருவாகியிருக்கிறது என தாராளமாக சொல்லலாம்.. பழைய இரும்பு சாமான்களின் கூட்டத்தில் ஒரு வெடிகுண்டு என்கிற இந்த விஷயம் படம் முழுதும் நம்மை பதைபதைக்க வைகிறது. லாரி டிரைவராக வரும் தினேஷ் அந்த கேரக்டரில் அவ்வளவு யதார்த்தமாக பொருந்தியிருக்கிறார்.. தன் லாரியில் இருக்கும் பொருள் குண்டு என தெரிந்ததும் அது எதிரிகளிடம் சிக்கிவிடாமல் பாதுகாக்க நடத்தும் போராட்டம் செம விறுவிறுப்பு.. வசனங்களை ஸ்பீடாக பேசுவதால் பல இடங்களில் புரியாமலேயே போய் விடுகிறது…

எப்படியாவது ட்ரைவர் ஆகிவிட வேண்டும் என நினைத்து தினேஷை கண்காணிப்பதற்காக கூடவே பயணிக்கும் முனீஸ்காந்த் தங்கள் வண்டியில் இருப்பது குண்டு என தெரிவதற்கு முன்பும் தெரிந்த பின்னும் பண்ணும் அலப்பறைகள் செம.. மீண்டும் முனீஸ்காந்த்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து அதை அழகாக பயன்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக கயல் ஆனந்தி நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள கேரக்டர்.. ரசிக்கும் படியாக செய்திருக்கிறார். இன்னொரு உயிர் இந்த வெடிகுண்டால் போய்விடக்கூடாது என்கிற பதட்டத்தை படம் முழுவதும் தன் முகத்தில் சுமந்திருக்கிறார் சமூக ஆர்வலராக வரும் ரித்விகா. காயலான் கடைக்காரராக வரும் மாரிமுத்து நிஜமாகவே அப்படி ஒரு கடை வைத்து இருப்பாரோ என்று சொல்லும் அளவிற்கு வெளுத்து கட்டியுள்ளார். அதிகார வர்க்கத்தின் கைக்கூலியாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் லிஜீஸ், அவரைவிட உயர்ந்த நிலை கைக்கூலியாக ஜான் விஜய் என எதிரிகள் பட்டாளமும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கின்றனர். ரமேஷ் திலக்கும் நிறைவாக செய்திருக்கிறார்.

தென் மாவின் இசையில் பாடல்கள் சிறப்பு.. அதைவிட பின்னணி இசை திர வைக்கிறது.. காயலான் கடை காட்சிகளை படமாக்கிய விதமாகட்டும், லாரியின் இரவு நேர சேஸிங் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதமாகட்டும் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரின் பங்களிப்பு மிகப்பெரியது. அந்த இடங்களில் இன்னொரு கைதி படம் பார்த்த உணர்வு ஏற்படுவதை மறுக்கமுடியாது.

புதியவரான அதிரன் அதிரை இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆயுதம் பயன்படுத்தாத உலகம் வேண்டும் என்கிற சமூகப் பொறுப்புள்ள ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.. கூடவே காயலான் கடையில் வேலை பார்ப்பவர்களின் வாழ்வியலுடன் ஆணவ கொலைகள் குறித்தும் கூறி அதிர வைக்கிறார்.. மொத்தத்தில் படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் என்பது உண்மை