இஞ்சி இடுப்பழகி – விமர்சனம்

image
ஸ்லிம்மானால் தான் கல்யாணமே நடக்கும் என்கிற நிலையில் இருக்கும் குண்டுப்பெண் அனுஷ்கா.. ஒவ்வொரு மாப்பிள்ளையும் நிராகரிப்பதால் விரக்தியாகும் சூழலில் டாக்குமென்ட்ரி படம் எடுக்க பெங்களூருக்கு வரும் ஸ்லிம் பிட் பாய் ஆர்யாவை பார்த்து லவ்வாகிறார்…

சொல்லாத காதலுக்கு தடையாக வருகிறார் ஆர்யாவுடன் பெவிகால் போட்டு ஒட்டாத குறையாக வரும் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி சோனல் சவுகான். உடம்பு இளைப்பதற்காக பிரகாஷ்ராஜின் ‘சைஸ் ஜீரோ’ என்கிற பயிற்சி நிலையத்தில் சேர்கிறார். அழகு வென்றதா..? காதல் வென்றதா என்பது க்ளைமாக்ஸ்..

தன்னம்பிக்கை டானிக் பாட்டிலாக வரும் ஆர்யா, அவ்வப்போது அனுஷ்காவுக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்து கொஞ்ச கொஞ்சம் ஸ்லிம் டிப்ஸ்களை ஊற்றிக்கொடுக்கிறார். மேஜர் ஏரியாவை கவர் பண்ணவேண்டிய மிகப்பெரிய்ய்ய்ய பொறுப்பு அனுஷ்காவின் தலையில் தான். ஆனாலும் அதை அசால்ட்டாக சுமந்திருக்கிறார்..

குண்டுப்பெண்ணாக நடிப்பதற்கும் அதற்காக உடல் எடையை ஏற்றி ரிஸ்க் எடுப்பதற்கும் தைரியம் வேண்டும்.. அது இந்த லேடி கமலிடம் அதிகமாகவே உள்ளது. குண்டாக இருப்பதற்காக ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படும் காட்சிகளில் எல்லாம் அந்த வலியை அழகாக பிரதிபலித்திருக்கிறார். குண்டாக இருந்தால் என்ன..? அனுஷ்கா அனுஷ்கா தான்..

ஆர்யாவை உரசிக்கொண்டு அனுஷ்காவை வெறுப்பேற்றும் வேலை மட்டும் தான் சோனல் சவுகானுக்கு. சைஸ் ஜீரோ கம்பெனி நடத்தி உடல் பருமனானவர்களின் பயத்தை காசாக்கும் தந்திரவாதியாக பிரகாஷ்ராஜ் புது தோற்றம் காட்டுகிறார். குண்டான மகளை கட்டிக்கொடுக்க பரிதவிக்கும் யதார்த்த அம்மாவின் அடாவடித்தனத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறார் ஊர்வசி.. அனுஷ்காவின் தம்பியாக வரும் மாஸ்டர் பரத்.. அட நம்ம ‘போக்கிரி’ உப்புமா பாய்… வளர்ந்துட்டாரேப்பா..

பிட்னெஸ் சென்டர், சைஸ் ஜீரோ சென்டர், பார்க் என மீண்டும் மீண்டும் சுற்றிய இடங்களிலேயே சுற்றிவரும் நீரவ்ஷாவின் கேமரா, க்ளைமாக்ஸ் பிட்னெஸ் சைக்கிளிங் பிரச்சாரத்தில் மாயாஜாலம் காட்டியிருக்கிறது.. சைஸ் செக்ஸி பாடலில் இறங்கி அடித்து யூத்துக்கு சவால் விடுகிறார் இசையமைப்பாளர் மரகதமணி..

வசந்தமாளிகை இயக்குனரின் பேரன் என்கிற அடையாளத்துடன் அறிமுகமாகி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவ். அவ்வப்போது சில இடங்களில் பிட்னெஸ் பிரச்சார நெடி அடித்தாலும், சோழவந்த விஷயத்தை சரியாகவே சொல்லியிருக்கிறார். ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியில் அனுஷ்கா தன காதலை ஒப்புக்கொள்ள அவ்வளவு காட்சிகளை இழுக்கத்தான் வேண்டுமா..? குறைத்திருக்கலாமே..

இரண்டே நாட்களில் ஸ்லிம் ஆகலாம் என ஆசையை தூண்டி மோசம் செய்யும் நபர்களை ஒருபிடிபிடித்து, உண்மையான அழகு நம் மனதில் தான் இருக்கிறது என இரண்டுமணி நேர பாடம் எடுக்கிறாள் இந்த ‘இஞ்சி இடுப்பழகி’.