வெயிட் லாஸ் சீட்டிங்கை அம்பலப்படுத்தும் ‘இஞ்சி இடுப்பழகா’..!

என்னாச்சு பிவிபி சினிமாஸுக்கு..? தினம் ஒரு படத்திற்கு பூஜை போட்டு திரையுலகையே ஆச்சர்யப்படுத்தி வருகிறார்கள்.. கடந்த ஞாயிறு, கார்த்த்-நாகார்ஜுனா நடிக்கும் படத்திற்கு பூஜை போட்டவர்கள், நேற்று ஆர்யா, ராணா, சிம்ஹா கூட்டணியில் உருவாக இருக்கும் பெங்களூர் டேய்ஸ்’ படத்தின் ரீமேக்கிற்கு பூஜை போட்டார்கள். இன்று ஆர்யா, அனுஷ்கா நடிக்க இருக்கும் ‘இஞ்சி இடுப்பழகா’ படத்தின் பூஜையையும் போட்டு அசத்திவிட்டார்கள்.

இஞ்சி இடுப்பழகா’ என டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே என நினைத்தால் கதையும் வித்தியாசமான காமெடி களத்தில் அமைந்துள்ளதாம். ஒரே வாரத்தில் ஸ்லிம் ஆகலாம் என்பதுபோல பெண்களின் வெயிட் லாஸ் ஆர்வத்தை வைத்து பிசினஸ் பண்ணுபவர்களின் முகத்திரையை இந்தப்படம் கிழிக்கும் விதமாக, அதேசமயம் காமெடியாக உருவாக இருக்கிறதாம்.

இதுகுறித்து பூஜை முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய அனுஷ்கா, “ஒல்லி, பருமன் என்பதெல்லாம் பெண்களுக்கு பிரச்சனை இல்லை.. ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.. அதுதான் பெண்களுக்கு அழகு” என்று கூறினார். அடிப்படையில் அவர் யோகா நிபுணர் என்றாலும் இந்தப்படத்தில் அதுகுறித்த விஷயம் எதுவும் இந்தப்படத்தில் இல்லையாம்..

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இந்தப்படத்தில் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. பரத், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இருக்கிறார்கள். முக்கியமான விஷயம், இதில்  ஸ்ருதிஹாசன் நட்புக்காக கௌரவ தோற்றத்தில் வருகிறார்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு மரகதமணி என்கிற பெயரில் இவர் நன்கு பரிச்சயமானவர் தான். கனிகா திலோன் கொவேலமுடி என்பவர் கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தை  அவரது கணவர் இயக்குனர் பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார்.