இனிமே இப்படித்தான் – விமர்சனம்

 

சந்தானத்துக்கு மூணு மாதத்திற்குள் திருமணம் நடக்கவேண்டும் என ஜோசியர் சொல்லிவிட மும்முரமாக பெண் தேடுகிறார் அவரது தந்தை ஆடுகளம் நரேன். பெற்றோர்களாக தேடினால் உனக்கேற்ற பெண்ணாக கிடைக்கமாட்டாள் என வி.டிவி.கணேஷ் உள்ளிட்ட நண்பர்கள் சந்தானத்தை உசுப்பி விடுகிறார்கள்.

அதனால் காதலித்து திருமணம் செய்ய முடிவுசெய்து, பெண் தேடி அலைகிறார் சந்தானம். அதற்கேற்றமாதிரி ஆஸ்னா ஸாவேரியை கண்டதும் சந்தானத்துக்கு காதல் மலருகிறது. ஆனால், அவர் பின்னாடி ரோமியோவாக சுற்றினாலும் ஆஸ்னாவோ இவர் பக்கம் திரும்புவதாக இல்லை.

இந்த நிலையில் மிலிட்டரிமேனான பெப்சி விஜயனின் மகள் அகிலா கிஷோரை சந்தானத்துக்கு பெண் பார்க்கிறார்கள். ஆஸ்னாவிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைக்காததால், சந்தானத்தின் தாய்மாமனான தம்பி ராமையா, அவரை மூளைச்சலவை செய்து அகிலாவுடன் நிச்சயதார்த்தையும் நடத்தி விடுகிறார்.

ஆனால் அதன்பின்னர்தான், ஆஸ்னா தன்னை லவ் பண்ணும் விஷயமும், தனது தாய்மாமன் அதை தன்னிடம் நிச்சயத்திற்கு முன்பே மறைத்ததும் சந்தானத்துக்கு தெரிய வருகிறது. அதனால் ஆஸ்னாவின் காதலை தொடர முடிவு செய்யும் சந்தானம், தனக்கு நிச்சயமான விஷயத்தை அவரிடமும் சொல்லாமால், அகிலா கிஷோரிடமும் தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லமுடியாமல் சிக்கி தவிக்கிறார்.

நல்லதோ, கெட்டதோ எந்த சிக்கலுக்கும் முடிவு உண்டு இல்லையா..? இரண்டு பெண்களுக்குமே ஒரு கட்டத்தில் இந்த உண்மை தெரியவருகிறது. அவர்கள் இருவரும் என்ன முடிவெடுத்தார்கள்..? சந்தானம் யாரை திருமணம் செய்தார் என்பது க்ளைமாக்ஸ்.

ஒரு பக்கம் காதலி, இன்னொருபக்கம் நிச்சயிக்கப்பட்ட பெண் என ஜாலியான கதையில் ‘சந்தோஷ் சுப்ரமண்யம்’ஆக புகுந்து விளையாடியிருக்கிறார் சந்தானம். “நைட்டில பார்த்தா நயன்தாரா கூட நார்மலாத்தான் இருப்பாங்க” என காட்சிக்கு காட்சி சந்தானத்தின் டயலாக்கில் யாராவது ஒருத்தர் டேமேஜ் ஆகிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அதனால் தியேட்டரில் ரசிகர்களின் சிரிப்பலையும் அடங்கவே மாட்டேன் என்கிறது.

இரண்டு கதாநாயகிகளில் ஆஸ்னாவிற்கு ஸ்கோர் செய்கின்ற வாய்ப்பு அதிகம்.. சந்தானத்தை டீலில் விடுவது, அவருக்கு நிச்சயம் ஆனது தெரிந்ததும் ஆக்ரோஷமாக சீறுவது என பின்னுகிறார். ஆஸ்னா அகிலா கிஷோருக்கு வாய்ப்பு குறைவுதான் என்றாலும், அவர் திரையில் வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு ப்ரெஷ்நெஸ் வந்து ஒட்டிக்கொள்கிறது.

சந்தானத்தின் தாய்மாமனாக வரும் தம்பி ராமையா சந்தானத்தின் காதலுக்கும், அவரது கல்யாணத்தை நிறுத்துவதற்கும் ஐடியா கொடுத்து சிக்கலில் மாட்டிவிடுவதுடன் சந்தானத்திடமும் வாங்கி கட்டிக்கொள்வது ஜாலி ரைட்.. ஐடியா மணியாக சந்தானத்திற்கு டிப்ஸ் தரும் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார் வி.டி.வி.கணேஷ்.

சந்தானத்தின் திருமணத்தில் ஏற்படும் திடீர் திருப்பமும் அதன் யதார்த்தமும் தான் படத்தின் ஹைலைட்.. சினிமாத்தனமாக இல்லாமல், நிதர்சனத்தை கிளைமாக்ஸாக வைத்ததால் இந்தப்படம் வெறுமனே காமெடிப்படமாக மட்டும் இல்லாமல், ஒரு முக்கிய கருத்தையும் சொல்லியிருக்கிறது.

சந்தானத்திற்கு தோதான கதையை தயார் செய்து, அதை துளிகூட சுவராஸ்யம் குறையாமல், கலகலப்பாக இயக்கியுள்ள, இயக்குனர்கள் முருகானந்த், முதல் படத்திலேயே வெற்றிக்கோட்டை எளிதாக தொட்டிருக்கிறார்கள்.