இன்று நேற்று நாளை – விமர்சனம்

எதிர்காலத்துக்கோ, கடந்த காலத்துக்கோ நம்மை கொண்டுசெல்லக்கூடிய டைம் மெஷின் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் திரை வடிவம் தான் ‘இன்று நேற்று நாளை’.

ஆர்யா ஒரு டைம் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதித்து பார்க்கும் ஒரு முயற்சியின்போது அது சென்னையில் குறிப்பிட்ட ஒரு இடத்தை வந்தடைய, அங்கே இருக்கும் விஷ்ணு மற்றும் அவரது நண்பர் கருணாகரன் கண்ணில் படுகிறது. கூடவே இருக்கும் கார்த்திக் என்கிற லோக்கல் விஞ்ஞானியின் உதவியால் இருவருக்கும் அதன் அருமை தெரியவருகிறது.

உடனே டைம் மெஷினை வைத்து, காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தருவதாக பிசினஸ் ஆரம்பிகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, விஷ்ணுவின் காதலியான மியாவின் அப்பா ஜெயபிரகாஷை ரவுடி ரவிசங்கர் மிரட்டுகிறான். ஆனால் போலீஸார் அவனை சுட்டுக்கொன்று விடுகின்றனர்.

ஆனால் அவன் இறந்த இரண்டு மாதம் கழித்து, ஒருமுறை இந்த டைம் மிஷின் மூலம் ஒரு பொருளை கண்டுபிடித்து எடுத்து வருவதற்காக கடந்த காலத்திற்கு செல்கின்றனர் விஷ்ணுவும், கருணாகரனும். அது சரியாக அந்த ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.. இவர்கள் அங்கே போகும் சமயத்தில் தான், சரியாக போலீசார் அந்த ரவுடியை கொல்வதற்காக துரத்துகின்ற சம்பவம் நிகழ்கிறது..

அப்போது விஷ்ணுவும் கருணாவும் அவர்களை அறியாமல் கவனக்குறைவாக செய்யும் சிறிய தவறினால் என்கவுண்டரில் ரவுடி கொல்லப்படும் நிகழ்வு நடக்காமல் போகிறது. அவனும் தப்பி விடுகிறான். இவர்கள் திரும்பி நிகழ்காலத்திற்கு வந்தபின் தான், ஜெயபிரகாஷ் அந்த ரவுடியால் மிரட்டப்படுவது தெரிகிறது. அதன்பின் பிரச்சனைகள் தொடர, அதற்கு தாங்கள் செய்த சிறிய பிழைதான் காரணம் என்று தெரியவருகிறது. டைம் மெஷின் உதவியால் அதிலிருந்து அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கதைச்சுருக்கத்தை படிக்கும்போது தலைசுற்றுகிறமாதிரி தானே இருக்கிறது. ஆனால் பார்ப்பவர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாத வகையில் புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைத்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவிகுமார்.

படத்தில் விஷ்ணு, கருணாகரன் என இரண்டு ஹீரோக்கள் என்றே சொல்லவேண்டும். பின்னே ஆரம்பம் முதல் இறுதிவரை ஒன்றாகவே சுற்றுகிறார்களே.. படத்தின் கலகலப்புக்கு இந்த இரண்டு பேரும் தான் உததரவாதம். தருகிறார்கள் காட்சிக்கு காட்சி நகைச்சுவையால், சில நேரம் திகிலால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

குறிப்பாக ஒருமுறை கடந்தகாலத்துக்கு செல்லும் கருணாகரன், ஒரு சிறுவனை பெயர் சொல்லி அழைத்து தலையில் குட்டுகிறார். காரணம் அந்த பையன் தான் கருணாகரனின் கணக்கு வாத்தியாராம். இப்படி கடந்தகால காட்சிகள் அனைத்துமே சுவராஸ்யமாகத் தான் இருக்கின்றன.

கதாநாயகி மியா அழகுப்பதுமையாக வருவதுடன் முகத்தில் விதவிதமான எக்ஸ்பிரஷன்களை அள்ளிக்கொட்டுகிறார். டைம் மிஷினில் ஏறி அவரது சிறுவயது காலத்திற்கு சென்றுவரும் காட்சிகள், குறிப்பாக மியாவின் அம்மாவின் பிரசவத்தில், மியா பிறக்கும் அந்த தருணத்தில் அவரது தாய்க்கு உதவும் காட்சியும், குழந்தையாக பிறந்த தன்னை தானே கைகளில் ஏந்தும் காட்சியும் அற்புதமான, அதே சமயம் ரசமான கற்பனை.

ரவுடியாக வரும் ரவிஷங்கர் மிரட்டுகிறார். லோக்கல் விஞ்ஞானியாக வரும் டி.எம்.கார்த்திக்கும் நகைச்சுவையில் குறை வைக்கவில்லை. ஹிப் ஹாப் தமிழா பாடல்களை குறைத்துக் கொண்டு கதையின் வேகத்துக்கு வழிவிட்டுள்ளார். டைம் மிஷினை வடிவமைத்த ஆர்ட் டைரக்டர் விஜய் ஆதிநாதனின் மெச்சத்தக்கது.

ஆக, இந்த டைம் மெஷின் குழந்தைகள் முதல் பெரிசுகள் வரை வாய்விட்டு ரசித்து சிரிக்கக் கூடிய படம் என்பதில் சந்தேகமே இல்லை.