இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

வக்கீல்களான விஜய் ஆண்டனிக்கும் சுஷ்மாவுக்கும் இடையே யார் முதலில் கேஸ் பிடிப்பது என்பதில் இந்தியா பாகிஸ்தான் போல ஏற்படும் மோதலும் (டைட்டில் ஒகே ஆயிருச்சா?) அதனால் ஏற்படும் காதலும் என கதை பழைய பஞ்சாமிர்தம் தான் என்றாலும் அதை புதிய டப்பாவில் அடைத்து தந்திருக்கிறார்கள்..

விஜய் ஆண்டனியும், சுஷ்மாவும் வக்கீல்கள் என்கிற பெயரில் கேஸ் பிடிக்க அலைவதெல்லாம் லாஜிக் மீறிய அட்ராசிட்டி.. காமெடி பண்ணவேண்டும் என்பதால் கவலைப்படாமல் வக்கீல் தொழிலை சகட்டு மேனிக்கு வாரியிருக்கிறார்கள்..

பி & சி ரசிகர்களிடம் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டதால், முதல் இரண்டு படங்களில் மெனக்கேட்டதுபோல இல்லாமல், லாஜிக்கையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு காமெடி கொத்து பரோட்டா போட முயற்சித்திருக்கிறார் விஜய் ஆண்டனி..

படம் காமெடி என்கிற பளேவரில் தயாராகி இருந்தாலும் விஜய் ஆண்டனி தனியாக காமெடி பண்ண முயற்சிக்காமல், பெரும்பாலும் காமெடி காட்சிகளில் அண்டர்ப்ளே செய்தே தப்பிக்கிறார். அவருக்கும் சுஷ்மாவுக்குமான காதல் ஈகோ ஆரம்பத்தில் சொதப்பினாலும் இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகளில் ரசிக்கும்படி இருக்கிறது.

பசுபதியையும் காமெடி ரூட்டிற்குள் இழுத்து வந்துவிட்டார்கள். அவரும் அவரது அல்லக்கைகளும் பண்ணும் அலும்புகள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக அவரது வலதுகையான ஆமக்குஞ்சுவாக நடித்திருக்கும் யோகிபாபு, வரும் காட்சியில் எல்லாம் சிரிக்க வைக்கிறார். பக்கடா பாண்டியும் தன் பங்குக்கு அசத்துகிறார்.

ஜெகன் அதிக நேரம் வந்தாலும் காமெடி என்கிற பெயரில் சவுண்ட் மட்டுமே விட்டு சிரமப்படுத்த, கொஞ்ச கொஞ்ச நேரமே வரும் காளி வெங்கட் அமைதியாக வந்து காட்சிக்கு காட்சி பிரமாதப்படுத்துகிறார். நல்ல நேரம் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர், அவரது ஆஸ்தான ஜோதிடராக வரும் மனோபாலா இருவரும் கயிறு கட்டி இறங்கும் காட்சியில் சிரிக்காதவர்கள் கூட சிரித்து விடுவார்கள்..

போலீஸ் வில்லனாக வரும் சரத் லோகிதஸ்வா சீரியஸாக வந்து கடைசியில் சிரிப்பு காட்டிவிட்டு போகிறார். தீனா தேவராஜன் இசை பாடல்களில் ஒப்புக்கும், பின்னணி இசையில் ஓரளவுக்குமாக செயல்பட்டிருக்கிறது..

இயக்குனர் ஆனந்தும் மேக்கிங்கில், கதை சொல்வதில் மிரட்டலான இயக்குனராக பெயர் வாங்கவேண்டும் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு படத்தை ஹிட் பண்ணினால் போதும் என்பது போலத்தான் செயல்பட்டிருக்கிறார்.. இருந்தாலும் இந்த சம்மரில் இந்தியா பாகிஸ்தான் காமெடிக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவே செய்யும்.