இமைக்கா நொடிகள் – விமர்சனம்

imaikka nodigal review

பெங்களூரு நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு சிபிஐ அதிகாரியான நயன்தாரா வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த தொடர் கொலைகளுக்கு காரணமான ருத்ரா என்கிற கொலைகாரனை என்கவுண்டரில் போட்டுத்தள்ளி பைலை க்ளோஸ் செய்கிறார் நயன்தாரா. ஆனால் தான் இன்னும் உயிரோடு இருப்பதற்காக அறிவிக்கும் ருத்ரா, அடுத்தடுத்து பணத்திற்காக, வசதியான வீட்டுப்பிள்ளைகளை கடத்தி கொலைகளை தொடர்கிறான்.

அவன் யாரென கண்டுபிடிக்க ஒரு க்ளூ கூட கிடைக்காமல் திணறுகிறார் நயன்தாரா. இறுதியாக நயன்தாராவின் தம்பி அதர்வாவின் காதலியான ராசி கன்னாவை கடத்துவதுடன், அதர்வாவை பகடைக்காயாக மாற்றி அவர்தான் ருத்ரா என்பது போல சித்தரிக்கவும் செய்கிறான் கொலைகாரன். இதனால் நயன்தாராவே தன் தம்பியை சுடவேண்டிய சூழல் உருவாகிறது.

யார் அந்த ருத்ரா..? எதற்காக தொடர் கொலைகள் செய்கிறான்.? அப்படியானால் ருத்ரா என்கிற பெயரில் வேறு யாரை நயன்தாரா கொன்றார்..? நயன்தாரா இந்த வழக்கை துப்பறிகிறார் என்பதுதான் அதர்வாவையும் அவரது காதலியையும் டார்கெட் பண்ணுவதற்கு காரணமா..? இந்த சிக்கலில் இருந்து அதர்வாவால் மீள முடிந்ததா..? தனது காதலியை காப்பாற்ற முடிந்ததா என இப்படி பல கேள்விகளுக்கு க்ளைமாக்சிற்கு முன்னதாக விடை சொல்கிறார்கள்.

சைக்கோ க்ரைம் த்ரில்லர் கதை என்பதால் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது. விஜயசாந்தி ரேஞ்சுக்கு சண்டைக்காட்சி, சேசிங் என இல்லாமல், சி.பி.ஐ அதிகாரியின் வரையறைக்கேற்றபடி நயன்தாராவின் கேரக்டரை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து . அதற்கேற்ப நயன்தாராவும் சி.பி.ஐ அதிகாரியாக நம்பத்தகுந்த மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .

நயன்தாராவுடன் ஒப்பிடும்போது அதர்வாவுக்கு இதில் முதல் பாதியில் வேலை குறைவு என்றாலும், பிற்பாதியில் ஆக்சன் ஏரியா அதர்வாவின் கைகளுக்கு போய்விடுகிறது. இடைவேளைக்கு முன் காதல், பிரேக் அப் என சுற்றும் அதர்வா, பின்பாதியில் ஆக்சனில் அதிரடி காட்டியிருக்கிறார். அவரது காதலியாக வரும் ராசி வழக்கமான துறுதுறு காதலி கேரக்டரில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

இவர்கள் எல்லாம் ஒரு பக்க தூண்கள் என்றால் படத்தின் மிக முக்கியமான தூணாக கலக்கியிருக்கிறார் ருத்ரா கேரக்டரில் நடித்திருக்கும் பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப். அவரது தோற்றமும் அலட்டல் இல்லாத நடிப்பும் மிரட்டல் ரகம். தமிழ் சினிமா இவரை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

கால்மணி நேரமே சிறப்பு தோற்றத்தில் வந்தாலும், இந்த கேரக்டருக்கு இவர் ஏன் என்கிற நியாயமான கேள்விகளுக்கு தனது நடிப்பால் பதில் சொல்லியிருக்கிறார் விஜய்சேதுபதி. அவராலேயே அந்த பிளாஷ்பேக் காட்சி அழுத்தம் பெற்று, கதைக்கு வலு சேர்க்கிறது.

நயன்தாராயாவின் கீழ் பணியாற்றும் அதிகாரியாக கோபம், பொறாமை கலந்த இயல்பான நடிப்பில் நடிகர் தேவன் பெர்பெக்ட் பிட். கூடவே நயன்தாராவிடம் அவ்வப்போது டோஸ் வாங்கும் போலீஸ் அதிகாரியாக வருபவரும் ரசிக்க வைக்கிறார். நயன்தாராவின் மகளாக வரும் சுட்டிப்பொண்ணு கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் குறும்பான பேச்சுக்களால் ரசிக்க வைக்கிறார்.

படத்திற்கு பிரமாண்டம் சேர்த்திருப்பதும், இதை ஒரு பக்கா சைக்கோ த்ரில்லராக மாற்றியிருப்பது ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவுதான். மொத்த பெங்களூர் நகரையும் பிரமிப்புடன் நமக்கு காட்டியிருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் ‘தூங்கவிடலையே’ பாடல் ஏற்கனவே இளசுகளின் பேவரைட் பாடலாக மாறிவிட்ட்டது. கதையின் வேகத்திற்கேற்ப பின்னணி இசையிலும் ஈடு கொடுத்துள்ளார் ஆதி.

இந்தப்படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் நச்சென பொருந்தினாலும், பல இடங்களில் வசனமே ஓவர் டோஸாக மாறிவிடுகிறது. படத்தின் நீளத்திற்கு பெரிய கத்திரி போட்டிருக்கவேண்டும். அதர்வாவை விரட்டி விரட்டி காதலிக்கும் ராசி கன்னா, நட்பு என்கிற பெயரில் நண்பனுடன் சேர்ந்து லாஜிக்கே இல்லாமல் அவரை வெறுப்பேற்றுவது அவரது கேரக்டரை டேமேஜ் செய்கிறது. அதர்வாவை போலீஸ் தேடுவதும், அவர் யார் கண்ணிலும் சிக்காமல், தன்னை நிரூபிக்க சுற்றி அலைவதும் வழக்கமான தமிழ் சினிமா பார்முலா தான். அதில் இயக்குனர் அஜய் ஞானமுத்து கொஞ்சம் புதிதாக யோசித்திருக்கலாம்.

அதேசமயம் படத்தின் கேரக்டர்களுக்கு ஸ்டார் வேல்யூ உள்ள நடிகர்களாக தேர்வது செய்திருப்பது மிகப்பெரிய பலம். தவிர சைக்கோ கில்லர் தொடர்கொலைகள் செய்வதற்கான பின்னணி கூட சற்றே வித்தியாசமானது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முன்னமே சொன்னது போல மாதிரி படத்தின் நீளத்தை சற்றே குறைத்(திருந்)தால் ரசிகர்களுக்கு போரடிக்காத அவர்களின் கண்களை இமைக்க விடாத படமாக இந்த இமைக்கா நொடிகள் இருக்கும்