“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’. நாயகனாக புதுமுகம் கவின் நடித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த சிவா அரவிந்த்., இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்,“இந்தப் படத்தை வெளியிடவே முடியாது எனக்கூறியவர்கள் தான் அதிகம். வெளியிட முடியும் என்று நம்பிய ஒரே ஆள் என் அம்மா தான். தற்போது படத்துக்கு ஊடகங்கள் கொடுத்த வரவேற்பால்தான் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்துள்ளனர். புது ஹீரோ தான் வேண்டுமென்று படம் எடுத்தால் எனக்கு இங்கு படம் காட்டுகிறார்கள். ஒரு படம் வெற்றி பெறுவதற்கு ஹீரோ தான் முக்கியம் என்கிறார்கள். அப்படி படம் எடுக்கவில்லை என்றால் நான் மீண்டும் தோற்றுப் போவேன் என்கிறார்கள். ஒரு நாள் இல்லை ஒரு நாள் தோற்று தோற்று மிகப்பெரிய தயாரிப்பாளராய் வருவேன்” என்று கூறினார்.