இசைஞானிக்கு பிரமாண்டமான பாராட்டுவிழா நடத்த தயாராகும் நம்ம அணி..!

ilayaraja

சொல்லி அடிக்கும் கில்லியாக நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் என தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது விஷால் அணி.. வெற்றி பெற்ற உற்சாகத்துடன் விஷால் தலைமையிலான ‘நம்ம அணி’ நிர்வாகிகள் இசைஞானி இளையராஜா அவர்களை இன்று சந்தித்தனர். அந்த சந்திப்பை தொடர்ந்து இசைஞானிக்கு பிரமானடமான பாராட்டு விழா எடுக்க இருப்பதாக விஷால் அறிவித்துள்ளார்.

இது பற்றி விஷால் கூறும்போது, “வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிகழ்வு இது. இளையராஜா அவர்களோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம் மேலும் ஒரு வருடம் நாங்கள் வேகமாக உழைக்க எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்கள் இசைஞானி இளையராஜாவுக்கு மிக பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தவுள்ளோம்.. இவ்விழா இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இருக்கும்.” என்றார்.

“இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதற்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நிச்சயம் 1௦௦ பேர் கலந்து கொள்ளும் ஒரு பாராட்டு விழாவாக இருக்காது. இவ்விழா பிரம்மாண்டமான ஒரு விழாவாக இருக்கும்” என்றும் கூறினார் விஷால்.

இந்த சந்திப்பின்போது, துணை தலைவர் பிரகாஷ்ராஜ் , கௌரவ செயலாளர் ஞானவேல்ராஜா, பைவ்ஸ்டார் கதிரேசன் செயற்குழு உறுப்பினர்கள் ரா.பார்த்திபன், எம்.கபார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.