இது கதிர்வேலன் காதல் – விமர்சனம்


அரசு உயர்நிலைப்பள்ளி.. பத்தாம் வகுப்பு.. மதிய நேரம் உள்ளே நுழைகிறார் சுப்பிரமணி வாத்தியார்.. பசங்க எல்லாம் எந்திரிச்சு நின்னு வணக்கம் சொல்லிட்டு மீண்டும் அமர்கிறார்கள்.. சுரேஷ், குணா, இப்ராஹிம், தரணி நாலு பேர் மட்டும் உட்காராமல் நிற்க, மற்ற மாணவர்கள் அவர்களை குழப்பத்துடன் பார்க்கிறார்கள்.

வாத்தியார் : இவங்க நாலுபேர் மட்டும் ஏன் நிக்கிறாங்கன்னு தெரியுமா.? காலைல கிளாஸை கட் அடிச்சுட்டு ‘இது கதிர்வேலன் காதல்’ படத்துக்கு போயிட்டு வந்துருக்காங்க.. படம் முடிஞ்சு வெளில வர்றப்ப நான் பாத்துட்டேன்.. இல்லையாடா..?
வாத்தியார் அதட்டல் போட நான்கு பேரிடமும் மௌனம் தான் பதில்..

வாத்தியார் : இவனுங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..?
ஆளாளுக்கு அடிக்கலாம், முட்டிக்கால் போடச் சொல்லலாம், வகுப்பைவிட்டு வெளியே அனுப்பலாம் என பதில் சொல்ல, விஜய்யின் குரல் மட்டும் கணீரென்று தனியாக ஒலித்தது..

விஜய் : சார் படத்தோட கதையை சொல்லச் சொல்லலாம் சார்..

வாத்தியார் யோசிக்கிறார்.. விஜய் சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. நாமும் கதையை கேட்டமாதிரி இருக்கும்.. நல்லா இருந்துச்சுன்னா நாளைக்கு லீவுதானே.. ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம் என முடிவு செய்தவர்.. ம்ம் ஒவ்வொருத்தனா சொல்லுங்கடா.. சுரேஷ் நீ சொல்லுடா படத்தோட கதை என்னடா..?

சுரேஷ் : சார் எடுத்தவுடனே.. மதுரையை காட்டுறாங்க.. அப்புறம்..

வாத்தியார் : வழவழன்னு பத்து மார்க் கேள்விக்கு பதில் சொல்ற மாதிரி இழுக்காம மூணு மார்க் கேள்விக்கு பதில் எழுதுற மாதிரி நாலே வரில கதையைச் சொல்லுடா.. நீ இரு.. டேய் குணா நீ சொல்லுடா..

குணா : சார் மதுரைல இருக்குற உதயநிதியோட அக்கா சாயாசிங் வீட்டை எதுத்துக்கிட்டு கோயம்புத்தூர்ல இருக்குற பரத்தை (இவர் காதல் பரத் அல்ல.. வேறு பரத்) கல்யாணம் பண்ணிக்குது. ஒருநாள் புருஷன்கூட சண்ட போட்டுட்டு அப்பா வீட்டுக்கு வருது.. இத சமாதானம் பண்றதுக்காக கோயம்புத்தூர் போற உதயநிதிக்கு எதிர்வீட்ல இருக்குற நயன்தாராவை பாத்ததும் காதல் வருது.. ஆனா நயன்தாரா தன்கூட பழகுற சுந்தரோட காதலை ஏத்துக்குற லெவல்ல இருக்குறார்.. இதுக்குமேல உதயநிதி காதல் ஒர்க் அவுட் ஆச்சாங்கிறதுதான் க்ளைமாக்ஸ்..

வாத்தியார் : ரெண்டாவது படமாச்சே.. இதுல உதயநிதி எப்டிடா நடிச்சிருக்கார்..?

இப்ராஹிம் : சார் முதல் படத்தை விட இதுல நல்லா இம்ப்ரூவ் ஆகிருக்கார் சார்.. டான்ஸ்கூட நல்லா ஆடுறாரு.. காமெடி சைடுல இவரும் தன் பங்குக்கு நாலு டைலாக்கை எடுத்து விடுறாரு சார்.. காதல், சென்டிமெண்ட் காட்சிகள்ல கூட நல்லா பண்ணிருக்கார் சார்.. இதேமாதிரி ஹீரோ பில்ட் அப், பஞ்ச் டயலாக்னு இல்லாம நடிச்சார்னா சீக்கிரம் மேல வந்துருவார் சார்..

வாத்தியார் : அப்படின்னாத்தான் பரவாயில்லையேடா.. சரி.. அடுத்து நயன்தாரா பத்தி நல்லதா நாலு வரில சொல்லுங்கடா..
பசங்க நாலு பேரும் “சார் நான் சொல்லுறேன்.. நான் சொல்லுறேன்” என கூச்சலிட அவர்களை கையமர்த்திய வாத்தியார் “சுரேஷ் நீ சொல்லுடா” என்றார்.
சுரேஷ் மற்றவர்களை பெருமிதத்துடன் பார்த்துவிட்டு தொடர்ந்தான்..

சுரேஷ் : சார்.. நயன்தாரா அவ்ளோ அழகா இருக்காங்க சார்.. நடிக்கிறதுக்கு வெயிட்டான் ரோல் இல்லைன்னாலும் அவங்க வர்றப்பல்லாம் உதயநிதிகூட சேர்ந்து நாமளும் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு சார்.. தப்பா நெனைக்காதீங்க சார்.. நீங்க கேட்டதுனால சொன்னேன்.. ஆனா பல காட்சிகள்ல காமெடியான நடிப்பையும் அவர்கிட்ட பாக்கமுடியுது சார்.. அப்புறம் சார்…

வாத்தியார் : சொல்லுடா.. ஏன் தயங்குற..?

சுரேஷ் : சார்.. அவங்க வெக்கப்படுற காட்சில எல்லாம் இன்னும் அழகா இருக்காங்க சார்..

வாத்தியார் : அட கிறுக்குப்பயலே..! சரி.. தரணி உனக்கு சந்தானம்னா பிடிக்காதே.. ஆனா அவர் காமெடி எப்படின்னு நீதான் சொல்லணும்..

தரணி : சார் பிடிக்காது அப்படின்னு எல்லாம் இல்ல சார்.. ஒரு தடவ கூட்டத்துல ஆட்டோகிராப் கேட்டேன்.. போடாம போயிட்டார்.. அதுதான் கோபம்.. மத்தபடி இந்தப்படத்துல பாதிவேலை சந்தானத்துக்குத்தான் சார்.. ஓப்பனிங் சாங் கூட அவர்தான் ஆரம்பிக்கிறார்.. சார் ரைமிங் டயலாக் நிறைய பேசுறார்.. என்னால சிரிப்பு தாங்க முடியலை.. அதுவும் க்ளைமாக்ஸ்ல அந்த ஆஸ்பத்திரி சீன்ல..

சுரேஷ் : டேய் சொல்லிடாதடா.. சார் அத தியேட்டர்ல போய் பாத்தா தான் ரசிக்கமுடியும்..

வாத்தியார் : அதுவும் சரிதான்.. ஆரம்பத்துல கதை சொல்றப்ப சாயசிங்’னு பேரு அடிபட்டுச்சே.. யாரு மன்மதராசா’ பாட்டுல ஆடுச்சே அதுவா..

குணா : அதேதான் சார்.. நல்லா நடிச்சிருக்காங்க.. அவங்கபுருஷனா ‘உன்னைப்போல ஒருவன்’ பட்த்துல போலீஸா வருவாரே பரத்.. அவர் நடிச்சிருக்கார். அவருக்கும் நயன் தாராவோட அப்பாவா வர்ற் ஜெயபிரகாஷுக்கும் ஒரு ஃபிளாஸ்பேக் இருக்கு பாருங்க.. சரி.. அத படத்துலயே போய் பாருங்க..

வாத்தியார் : ஏண்டா சரண்யா மேடம் இருக்காங்கலே அவங்களை பத்தி சொல்லவே இல்லையே..

இப்ராஹிம் : சார்.. அவங்களோட நடிப்பு, அப்புறம் உதயநிதியோட அப்பாவா வர்ற ஆடுகளம் நரேன் இவங்கள பத்தி நாம் சொல்லியா தெரியணும்.. அப்பா கேரக்டர்ல ஆடுகலம் நரேன்’ அப்படியே ஃபிட் ஆயிட்டார் சார்..

வாத்தியார் : டே தரணி நீ ஏண்டா கம்முனு நிக்குற.. அப்புறம் வேற யாருடா படத்துல..?

தரணி : சார் நம்ம மயில்சாமி ரெண்டு, மூணு சீன்லதான் வர்றார் சார். மிமிக்ரி பண்ணியே பிரிஞ்ச ரெண்டு பேரை சேர்த்து வைக்குறார் சார்.. சான்ஸே இல்லை.. அப்புறம் சார் நம்ம தனுஷோட ‘மயக்கம் என்ன’ படத்துல நடிச்ச சுந்தர் இதுல நடிச்சுருக்கார் சார்.. கிட்டத்தட்ட வில்லன் சார்.. ஆனா அவரைப் பாக்குறப்ப எல்லாம் கோபம் தான் சார் வருது.

வாத்தியார் : அதுதாண்டா ஒரு கேரக்டரோட சக்சஸ்.. சரி ஹாரிஸ் மியூசிக் போட்ருக்காரே.. ஒகே ஓகே மாதிரி இதுலயும் ஓகேவா..?

சுரேஷ் : பரவாயில்ல சார்.. ஆனா அவ்வளவு பெருசா இந்தப்படத்துல பாட்டு இம்ப்ரெஸ் பண்ணலை சார்..

குணா : சார்.. ரெண்டு பாட்டு எனக்கு பிடிச்சிருக்கு சார்.. ‘மேலே மேலே’ன்னு ஒரு சாங், அப்புறம் ‘பல்லாக்கு தேவதைய’ன்னு ரெண்டு சாங் திரும்ப கேக்கலாம் சார்..

தரணி : சார் இந்த பாட்டு சீன்ல பாலசுப்ரமணியத்தோட ஒளிப்பதிவு நல்லா இருந்துச்சு சார்..

வாத்தியார் : போட்டோகிராபராட தம்பிங்கிறத கரக்டா நிரூபிக்கிறான் பாரு.. சரிடா.. இப்பத்தான் முக்கியமான கேள்வி.. இந்தப்படத்தோட டைரக்டர் யார்னு தெரியுமா.?

இப்ராஹிம் : என்ன சார் இப்டி கேட்டுட்டீங்க.. எங்க சசிகுமாரை வச்சு சுந்தரபாண்டியன்னு சூப்பர்ஹிட் படம் தந்தவரு.. அவரை தெரியாம இருக்குமா..?

வாத்தியார் : அப்ப சுத்தி வளைக்காம சொல்லுங்க.. இதுல அவர் டைரக்‌ஷன் எப்படி..? டேய் சுரேஷ் நீ சொல்லுடா..

சுரேஷ் : சார் ‘சுந்தரபாண்டியன்’ படம் மாதிரின்னு எதிர்பார்த்து போகக்கூடாதுன்னு எங்களுக்கு தெரியும் சார். ஆனா உதயநிதி, சந்தானம் இருக்கிறதால ‘ஓகே ஓகே’ படம் மாதிரி கலகலன்னு இருக்கும்னு தான் போனோம்..

வாத்தியார் : இருந்துச்சா..?

சுரேஷ் : சார் ஜாலி, கலாட்டாவுக்கு எல்லாம் பஞ்ச்மே இல்ல சார்.. நல்லா சிரிக்கவும் வச்சிருக்காரு.. அதேசமயம் இன்னைக்கு காதலர்தினத்துக்கு ஏத்தமாதிரி காதலர்களுக்கு ஒரு மெசெஜும் வச்சிருக்காரு.. ஆனா கதையில இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாமோன்னு எனக்கு தோணுது சார்..

வாத்தியார் : டேய் குணா நீ சொல்லுடா.. படம் எப்டி இருக்கு..?

குணா : சார்.. இந்த மாதிரி படத்துக்கு அழுத்தமான கதை தேவையில்ல சார்.. கலகலன்னு போற காமெடி, போரடிக்காத திரைக்கதை இருந்தா போதும்.. அது ரெண்டும் இதுல இருக்கு சார்.. தாராளமா பாக்கலாம் சார்.

வாத்தியார் : சரி.. ஒரு நல்ல படத்துக்கு போயிட்டு வந்ததுனால உங்களை இந்தத்தடவை மன்னிச்சு விடுறேன்.. அடுத்த தடவை படத்துக்கு போறதுன்னா.. லீவு நாள்ல தான் போகணும்.. புரியுதா..? உக்காருங்க.. பசங்களா எல்லாரும் நோட்டை எடுங்க..
வகுப்பு ஆரம்பித்தது..

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>