‘இது என்ன மாயம்’ – இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்..!

சைவம் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை வாங்கிவிட்ட பூரிப்புடன் தான் அடுத்து இயக்கியுள்ள ‘இது என்ன மாயம்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்தியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப்படத்தை ராதிகா, சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப்படத்தில் இசையமைப்பதன் மூலம் ஏ.எல்.விஜய்யுடன் ஏழாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

விழாவின் ஆரம்பத்தில் பேசிய ராதிகா இந்தப்படத்தின் நாயகியாக தமிழுக்கு அறிமுகமாகி இருக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழ்சினிமாவின் ராக் ஸ்டாராக வலம் வருவர் என வாழ்த்தினார். அருகில் நின்றிருந்த தனது கணவர் சரத்குமாரை பார்த்து “ரொமான்ஸ் கிங்’னா அது சரத்குமார் தான்” என்று சொல்ல அறுபது வயதான சரத்குமாருக்கு முகமெல்லாம் பூரிப்பு.

இந்தப்படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் பேசும்போது “நான் தயாரித்த படங்களிலேயே அதிகம் செலவு வைத்திருப்பவர் விஜய் தான்” என்றார். மேலும் தனது முந்தைய படத்தின் திருட்டு விசிடி வெளியானபோது அதில் தயாரிப்பாளரான தனது பெயரை போடாமல் விட்டதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துக்கொண்டார். இது எப்டி இருக்கு..?

“ஏ.எல்.விஜய் படங்களுக்குத்தான் நான் அதிகம் பாடல் எழுதியிருக்கிறேன்.. வாரமலரில் வெளியான என்னுடைய கவிதையை கூட தனது சினிமாவில் பாடலாக்கியவர் விஜய்” என கூறிய நா.முத்துக்குமார் இந்தப்படத்திலும் ‘இருக்கிறாய்.. இல்லாமலும் இருக்கிறாய்” என்கிற தனது கவிதை பாடலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனது கணவர் படத்தின் விழா அல்லவா..? அமலாபால் வராமல் இருப்பாரா..? வந்தவர், “விஜய்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு.. ஹாலிடேக்காக எங்கேயாவது போனால்கூட கதை சொல்லிட்டே இருக்கும்” என ஒரு போட்டாரே பாருங்கள்..

தொடர்ந்து பேசிய கௌதம் மேனன், “விஜய் எப்படித்தான் இத்தனை ஜெனர்ல படம் பண்றாருன்னு ஆச்சர்யமா இருக்கு. தன்கிட்ட அடிக்கடி கதை சொல்றதா அமலாபால் சொன்னாங்க.. அப்படி ஏதாவது சில கதைங்க பாக்கி இருந்தா என் பக்கம் தள்ளி விடுங்க” என போகிற போக்கில் பிட்டை போட்டுவிட்டு கிளம்பினார்.

அடுத்து பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், “விஜய் அடிக்கடி கதை சொல்லுதுன்னு அமலாபால் சொன்னாங்க.. இன்னும் ‘சொல்லுது’ அப்படினுதான் சொல்றார்.. விஜய் அவங்களுக்கு நல்லா தமிழ்பேச கத்துக்குடுங்க.. அப்புறம் அங்க பாருங்க.. அவங்க, பின்னாடி உக்கார்ந்திருக்க குழந்தையவே ரொம்ப நேரமா கொஞ்சிட்டு இருக்காங்க.. அதுக்கும் ஏதாவது செய்ங்க” என சொன்னதுதான் தாமதம், அது அமலாபாலுக்கு புரிந்ததோ இல்லையோ, விஜய்க்கு வெட்கம் தாங்கமுடியவில்லை.

ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு பிரபலம் அறிமுகப்படுத்துவது போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மனோபாலாவிடம் ஒரு பாடலுக்கான சீட்டு கொடுக்கப்பட, அது ஆங்கிலத்தில் இருந்ததால் யோசித்த மனோபாலா, டக்கென அருகில் இருந்த தனஞ்செயனிடம் அதை கொடுத்து, “நீங்கதான் இங்கிலீஷ்ல புத்தகமெல்லாம் எழுதி விருது வாங்கிருக்கீங்க.. நீங்களே படிச்சு சொல்லுங்க” என கொடுத்தார். அதை வாங்கி படிக்க ஆரம்பித்த தனஞ்செயன் அதில் உள்ள பாடல் வரிகளை தவறாக உச்சரித்துவிட, ஒரே கலாட்டாதான். உடனே மனோபாலா’ “அதுக்குத்தான் மைக் கிடைச்சதுன்னு உடனே வாங்கிற கூடாது.. நான் எப்படி எஸ்கேப் ஆனேன்னு பாத்தீங்களா’ என்று கலாய்த்தார்.

விழவை மூன்று ரேடியோ ஜாக்கிகள் தொகுத்து வழங்க, அதில் மேடையை வீடு கீழே இறங்கி வி.ஐ.பி.கள் இடத்துக்கே மைக்கை கொண்டு வந்த ஆர்.ஜே பாலாஜி, இயக்குனர் விக்ரமனை ‘சென்டிமென்ட்டா ஏதாவது சொல்லுங்க சார்’ கலாய்க்க, சூடான அவர், “தம்பி என் படங்கள்ல எப்பவுமே காமெடிதான் அதிகமா இருக்கும்.. நானும் காலேஜ்லாம் முடிச்சுட்டு வந்தவன் தான். பாக்குறதுக்குத்தான் ஜென்டில்மேன் மாதிரி காட்டிக்கிட்டு இருக்கேன்” என சொல்ல அப்படியே பம்மிவிட்டார் பாலாஜி.

இந்த விழாவில் பிரபு, பாபி சிம்ஹா, சுகாசினி, கீர்த்தி சுரேஷின் அம்மாவும் முன்னாள் நடிகையுமான மேனகா, பிரபு சாலமன், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ‘இது என்ன மாயம்’ படம் வரும் மே-1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.