ரஜினியை வைத்து ட்ராபிக் ராமசாமி கதையை படமாக்க நினைத்தேன் ” இயக்குனர் ஷங்கர்

சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி புரட்சி இயக்குனர் என்று பெயரெடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். சமூக போராளியான டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் என்பதிலிருந்து ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூன்-22ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் இந்தப்படம் ரிலீசாகிறது.

இந்தநிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. ஆச்சர்யமாக இந்த விழாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கலந்துகொண்டார்..ஷங்கர், எஸ்.ஏ.சந்திரசேகரின் சீடர் என்பது பல பேருக்கு தெரியாது.. தன்னிடம் கிட்டத்தட்ட 17 படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்த ஷங்கர், எப்போதுமே தன்னிடம் ஒரு திட்டு கூட வாங்கியதில்லை என நேற்றைய விழாவில் பெருமையுடன் குறிப்பிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ஒரு மெசேஜ் மட்டும் தான் அனுப்பினாராம். அதற்கு கட்டாயம் வருகிறேன் என பதில் அனுப்பிய ஷங்கர் சொன்னபடி கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தினார். மேலும் விழா துவங்குவதற்கு முன்கூட்டியே வந்து விட்ட ஷங்கரை அரை மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்து விட்டதற்காக தனது சிஷ்யனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இந்த விழாவில் ஷங்கர் பேசும்போது, “இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர் தான். இவர் கத்தி எடுக்காத இந்தியன்..வயசான அந்நியன் அம்பி. அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். ஆம்.. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் திட்டமிட்டு இருந்த நேரத்தில் தான் இதில் எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் அடடா வட போச்சே என ஏமாற்றம் ஏற்பட்டது இருந்தாலும் இதில் எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.” என பேசியுள்ளார் ஷங்கர் .