“ஹீரோக்களின் டார்ச்சரை வேறுவிதமாக சமாளிப்போம்” – இயக்குனர் ஹரி..!

2௦௦2ல் பிரசாந்தை ஹீரோவாக வைத்து ‘தமிழ்’ என்கிற படத்தின் இயக்குனராக தமிழ்சினிமாவில் நுழைந்தவர் இயக்குனர் ஹரி.. இந்த 13 வருடங்களில் சரியாக 13 படங்களை இயக்கிய சாதனைக்கு சொந்தக்காரர்.. தயாரிப்பாளர்களின் இயக்குனர் என சொல்லப்படுகிறவர்களில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு அடுத்த இடத்தில் நிற்பவர்..

இதோ தனது 13வது படமாக விஷாலை வைத்து ‘பூஜை’யை தயார்செய்து தீபாவளி ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த இயக்குனர் ஹரி இதுவரை தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்தார். அப்போது ஒரு நிரூபர் இதுவரை நீங்கள் இயக்கிய ஹீரோக்களில் உங்களை டார்ச்சர் செய்தவர் யார் என ஒரு கேள்வி கொக்கியை போட்டார்.

“ஹீரோக்கள் சரியான நேரத்திற்கு வராவிட்டால் அதுதான் டார்ச்சர் என சொல்லுவேன். எனக்கு டான்னு 6.3௦ மணிக்கு ஸ்பாட்ல நிக்கணும். ஆனால் இதுவரைக்கும் என் பட ஹீரோக்கள் அனைவருமே அந்தவகையில் எனக்கு டார்ச்சர் கொடுத்ததே இல்லை. ஆனால் கதையில், வசனத்தில், காட்சியில் சில நேரங்களில் அவர்களுக்கு சந்தேகமோ, குழப்பமோ தோன்றும்.. பேச்சு நம்மிடம் இருந்தாலும் அவர்கள் மனது அதை சுற்றியே இருக்கும்.. இதுவும்கூட ஒருவகையான டார்ச்சர் தான்.

ஆனால் அதை நான் சரியாக கண்டுபிடித்து விடுவேன்.. சொல்லப்போனால் இப்படிப்பட்ட ஹீரோக்களைத்தான் எனக்கு பிடிக்கும்.. அவரையே அழைத்து என்ன சார் பிரச்சனை என்று டக்கென கேட்டு விடுவேன்.. அவர்களும் காட்சியிலோ, வசனத்திலோ தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அப்போது வெளிப்படையாக சொல்வார்கள். அதற்கு உடனே நான் பதில் சொல்லமாட்டேன்.. அப்படி சொன்னால் நானே அவரை கன்வின்ஸ் செய்ததாக ஆகிவிடும். அதற்கு பதிலாக எனது உதவி இயக்குனர்களை கூப்பிட்டு அந்த காட்சிக்காக நாம் முதலில் யோசித்த காட்சிகள் என்னெண், எழுதிய வசனங்கள் என்னென்ன என சொல்லவைப்பேன்.

சம்பந்தப்பட்ட ஹீரோவும் “ஓஹோ..இவங்க இவ்வளவு தூரம் அலசிட்டுத்தான் இதை பைனல் பண்ணிருக்காங்க”ன்னு சந்தேகம் விலகி தெளிவாகிடுவாங்க.. இது அப்பப்ப எல்லா ஹீரோக்களோட ஷூட்டிங் ஸ்பாட்லயும் நடக்கிறதுதான்.. அத டார்ச்சர்னு எடுக்காம ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டா ஒரு பிரச்சனையும் இல்ல.. நான் அப்படித்தான் டீல் பண்றேன்.. அதனால் எனக்கு இதுவரை எந்த ஒரு ஹீரோவுடனும் பிரச்சனை வந்ததே இல்லை” என்கிறார் ஹரி.. இப்போது புரிகிறதா ஹரியின் வெற்றிக்கான சூட்சுமம்..