“தந்தைக்கு படத்துக்கு கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்துவிட்டது” – வால்டர் விழாவில் நடிகர் சிபிராஜ்

வால்டர் என்கிற பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கண்டிப்பும் கம்பீரமும் நிறைந்த போலீஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் தான். 90களில் எதிரிகளுக்கு மிகப்பெரிய சிம்மசொப்பனமாக விளங்கிய வால்டர் தேவாரத்தை கவுரவப்படுத்தும் விதமாக பி.வாசு, சத்யராஜ் கூட்டணியில் வால்டர் வெற்றிவேல் திரைப்படம் வெளியானது. அந்த படம் கிட்டத்தட்ட 200 நாட்களைத் தாண்டி ஓடி மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென முன்னுதாரணமாக சொல்லும் படங்களில் ஒன்றாக மாறியது.

கிட்டத்தட்ட 28 வருடங்கள் கழித்து மீண்டும் அதே வால்டர் என்கிற டைட்டிலில் உருவாகியுள்ள போலீஸ் அதிகாரியை மையப்படுத்திய கதையில் நடித்துள்ளார் சிபிராஜ். யு. அன்பு என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி ஐபிஎஸ்ஸின் மகன் பிரபு திலக் இந்த படத்தை தயாரித்துள்ளது தான். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் வால்டர் தேவாரம் மற்றும் திலகவதி ஐபிஎஸ், இயக்குனர் பி வாசு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்,

இந்த விழாவில் சிபிராஜ் பேசும்போது, “என் தந்தையின் வால்டர் வெற்றிவேல் பட இசைவெளியீட்டு விழாவில் வால்டர் தேவாரம் ஐயா வந்திருந்ததாகவே என் மனதில் ஆழமாக பதிந்து இருந்தது. ஆனால் இயக்குனர் பி.வாசு பேசியபோது அந்த விழாவிற்கு வால்டர் ஐயா வரவில்லை என்பது தெரிந்தது. ஆனால் என்னுடைய படத்திற்கு அவர் வந்து இந்த விழாவை சிறப்பித்தது என் தந்தைக்கு கூட கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்து விட்டதாக எண்ணி மகிழ்கிறேன்” என்று நெகிழ்ந்தார்.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியம் பற்றி அவர் பேசும்போது, “சதுரங்கவேட்டை படத்திலே அவர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் என்னைத்தான் நடிக்க அழைத்தார்கள். சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்த படம் வெளியான பிறகு அதில் அவர் நடிப்பை பார்த்துவிட்டு, என்னால் அந்த அளவுக்கு நிச்சயமாக நடித்திருக்க முடியாது என்பதை உணர்ந்தேன்” என்றும் மேடையில் அமர்ந்திருந்த நட்டியை பாராட்டி கூறினார் சிபிராஜ். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.