“மகிழினி கேரக்டரில் ‘செம’யாக வாழ்ந்திருக்கிறேன்” – அர்த்தனா

இயக்குனர் பாண்டிராஜிடம் சில வருடங்களாக உதவி இயக்குனராக இருந்தவர் வள்ளிகாந்த். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘செம’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. கதாநாயகியாக ‘தொண்டன்’ படத்தில் கவனம் ஈர்த்த அர்த்தனா நடித்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தை தனது சிஷ்யருக்காக தானே தயாரித்தும் உள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்

இந்தப்படம் மே 25ஆம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அர்த்தனா என்ன சொல்கிறார்..?

“ஜிவி பிரகாஷ் உடன் நடிக்கும் போது ஒரு சக நடிகையாக அல்லாமல், ஒரு ரசிகையாக அந்த தருணத்தை உணர்ந்தேன். அவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன், இசையில் அவரது படைப்புகள் என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பாக பின்னணி இசையில் அவர் ஒரு மாஸ்டர், நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள்”

“வள்ளிகாந்த் கதை சொன்ன விதமும், என்னுடைய மகிழினி கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. தென் தமிழக பின்னணியில், ஒரு பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மகிழினி அவள் பெயருக்கேற்றார் போல உண்மையானவள், நம் வாழ்வில் எங்கேயாவது அவளை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திக் கொள்ள உதவியாக இருந்த இயக்குனர் வள்ளிகாந்துக்கு நன்றி”.

அவருடைய அடுத்த இரண்டு படங்களுமே கூட கிராமத்து படங்கள் தான். அவை கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், விக்ராந்த்தின் வெண்ணிலா கபடி குழு. “இந்த இரண்டு படங்களிலுமே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்ததால், கிராமத்து பெண்கள் போல தாவணி உடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். என்னுடைய திரை வாழ்வை ‘செம’ தொடங்கி வைத்திருக்கிறது. மே 25ஆம் தேதி ரிலீஸுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நகரத்து பெண் கதாபாத்திரங்களிலும் நடிப்பேன்” என்றார் அர்த்தனா.