“நல்ல படம் எப்படி நம்மை தேடிவரும்” – வால்டர் மூலம் உண்மையை உணர்ந்த சிபிராஜ்

வரும் வெள்ளியன்று (மார்ச்-13) சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் படம் ‘வால்டர்’. எப்படி சத்யராஜின் திரையுலக பயணத்தில் ‘வால்டர் வெற்றிவேல்’ படம் ஒரு மைல்கல்லாக அமைந்ததோ தற்போது அதே ‘வால்டர்’ தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நட்டி நடராஜ், ஷெரின் காஞ்ச்வாலா, யாமினி சந்தர், ரித்விகா, அபிஷேக் ஆகியோர் நடித்துள்ளனர், புதுமுக இயக்குநர் U.அன்பு இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படம் தன்னை தேடி வந்தது குறித்து சிபிராஜ் ரொம்பவே சிலாகித்து பேசுகிறார்.. “சினிமாவில் ஒரு நல்ல படம் அதற்கு தேவையானதை அதுவே தேடிக்கொள்ளும் என்பார்கள் அது எப்படி என்று யோசிப்பேன். ஆனால் இந்தப்படத்தில் அது நடந்தது. ஐந்து வருடமாக உழைத்து, இந்தப்படத்தை பல தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்று, பெரும் கஷ்டங்களுக்கு பிறகு இப்போது இயக்கியுள்ளார் அன்பு. இறுதியில் இப்படம் ஒரு நல்ல பொறுப்பான தயாரிப்பாளரிடம் வந்து சேர்ந்துள்ளது. இப்படத்தில் நட்டி நடிக்கிறார் எனும்போதே எனக்கு பயமாக இருந்தது. அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அப்பாவுடனும் வடிவேல் சாருடனும் நடிக்கும்போது பயமாக இருக்கும். எப்படி இவர்கள் முன் நடிப்பது என்று. அதே மாதிரி தான் நட்டி சார் முன் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக ஆதரவாக இருந்தார். இந்தப்படம் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து இப்போது ஒரு நல்ல நிலையை வந்தடைந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் சாட்டிலைட் விற்றுவிட்டது. படத்தின் மீதும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்..