தமிழ் சினிமாவில் பேய்(படங்)களின் ஆதிக்கம் குறையுமா..?

horror films

எப்போது சேர்த்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால் தமிழ் சினிமாவில் காதல், ஆக்சன், காமெடி என்கிற பிராண்டுகளில் படங்கள் வெளியகிக்கொண்டு இருந்த நேரத்தில் அந்தப்பட்டியலில் சத்தமில்லாமல் பேய்ப்படங்களும் நுழைந்து இன்று அழுத்தமான ஒரு இடத்தையும் பிடித்துக்கொண்டன.. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் ஆதிக்க சக்தியாகவும் மாறிவிட்டன.

சரி, இந்தப்படங்களும் காதல், காமெடி போல ஒரு சீசனாக கொஞ்ச நாள் இருந்துவிட்டு போய்விடும் என்று பார்த்தால், நிரந்தரமாகவே ஒரு இடத்தை பிடித்துக்கொண்டு நங்கூரம் போட்டு அமர்ந்துவிட்டன. கடந்த வருடமும் இந்த வருடமும் வெளியாகியுள்ள பேய்ப்படங்களின் பட்டியலை பார்த்தாலே இது நன்றாக புபலப்படும்..

கடந்த 2015ல் டார்லிங், மூச், காஞ்சனா-2,, யூகன், டிமாண்டி காலனி, பேபி, மகாராணி கோட்டை, ஸ்ட்ராபெர்ரி, மாயா, உனக்கென்ன வேணும் சொல்லு, ஓம் சாந்தி ஓம் என 11 படங்கள் வெளியாகின.. இந்த வருடம் இதுவரை பேய்கள் ஜாக்கிரதை, திகிலோடு விளையாடு, அரண்மனை-2, சௌகார்பேட்டை, விடாயுதம், டார்லிங்-2, ஹலோ நான் பேய் பேசுறேன், ஜீரோ, களம், ஜித்தன்-2, மீரா ஜாக்கிரதை என 11 படங்கள் வெளியாகியுள்ளன..

அதாவது கடந்த ஒரு வருடத்தில் வெளியான ஹாரர் படங்களின் எண்ணிக்கையை, இந்த வருடத்தின் ஐந்து மாதங்களிலேயே எட்டிபிடித்துவிட்டது தமிழ் சினிமா.. அப்படியென்றால்..? ஆம்.. இன்னும் ஹாரர் படங்களின் படையெடுப்பு அதிக அளவில் இருக்ககூடும் என்பது நன்றாகவே தெரிகிறது.. அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போதையை நிலவரப்படி சுமார் 40 ஹாரர் படங்கள் தயாரிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது..

பேய்ப்படங்கள் என்றாலே பயந்து பயந்து பார்த்தது போய், இப்போது பேய்ப்படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே பயப்படவேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார்கள்.. பின்னே அளவுக்கு மிஞ்சினால் ஜிலேபியும் கசக்கும் தானே…?

எதற்காக இப்படி புற்றீசல் போல ஹாரர் படங்களாக எடுத்து தள்ளுகிறார்கள் என்பதை கவனித்தால் பொதுவான சில அம்சங்கள் புலப்படும்.. பெரும்பாலும் ஹாரர் படங்களை இயக்குபவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் புதுமுக இயக்குனர்கள் தான்.. அதில் நடிப்பவர்கள் கூட புதுமுகங்கள் அல்லது ஓரளவு அறிமுகமான இரண்டம் நிலை நடிகர்கள் தான்.

தவிர படத்தின் பிரதான கதைக்களமாக ஒரு பிரமாண்ட பங்களா ஒன்று தவறாமல் இடம்பெறும்.. படத்தின் முக்கால்வாசி காட்சிகள் இந்த பங்களாவிலேயே எடுக்கப்பட்டிருக்கும்.. இவை அனைத்துக்கும் மூல காரணம் படத்தின் பட்ஜெட் தான்.. குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நாட்கள் படப்பிடிப்பில், குறைந்த சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து ஒரு ஹாரர் படத்தை எடுத்துவிட்டால், போட்ட அசலை எடுப்பதற்கு மினிமம் கியாரண்டி கிடைத்துவிடும் என நம்பப்படுவதுதான் இந்தப்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க மிக முக்கிய காரணம்.

அதையும் மீறி படம் க்ளிக்காகி விட்டால் கோடிகளில் லாபம், உடனே அதன் அடுத்த பாகம் என ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.. ஆனால் இது எல்லோருக்கும் ஒர்க் அவுட் ஆகிவிடுகிறதா என்ன..? இந்த விஷயத்தில் லாரன்ஸ் தெளிவாக இருக்கிறார்.. ஹாரர் படங்களில் அவரது படங்கள் தனித்தன்மையுடன் இருப்பதுதான் அவர் தொடர்ந்து முனி, காஞ்சனா, காஞ்சனா-2 என ஹாட்ரிக் ஹிட் அடிக்க காரணம்.. வலுவான, ஒரு ஆவி உருவாதற்கான மனதை கரைக்கும் விதமான காரணத்துடன் கூடிய பிளாஸ்பேக் தான் இவரது படங்களின் பலம்.

காமெடிப்படங்களை மட்டுமே எடுத்துவந்த சுந்தர்.சி பரீட்சார்த்த முயற்சியாக அரண்மனை படத்தை ஹாரர், காமெடி இரண்டையும் சரி விகிதத்தில் கலந்து கொடுத்திருந்தார். படம் சூப்பர்ஹிட் ஆனது.. அடுத்து அரண்மனை-2 கொடுத்தார். அதுவும் ஹிட். லாரன்ஸின் படங்களைப்போல இவரது ஹாரர் படங்களில் அவ்வளவு அழுத்தம் இல்லையென்றாலும் ரசிகர்களை சிரிக்கவைத்து, ஓரளவு பயமுறுத்தும் வேலையையும் சரியாக செய்து திருப்தியாக அனுப்பி வைத்தார் சுந்தர்.சி.. ஆக இனி அரண்மனை-3ஆம் பாகத்தையும் கூட நாம் எதிர்பார்க்கலாம்.

ஒரு பிரமாண்ட பங்களா, ஏதோ ஒரு காரணத்துக்காக செத்துப்போய் அந்த பங்களாவில் இருந்துகொண்டு வருவோர், போவோரை ஆட்டுவிக்கும் ஆவி என ஒரு ரெடிமேட் கான்செப்ட்டிலேயே பலரும் பயணிப்பதால் தான் பெரும்பாலான ஹாரர் படங்கள் தோல்வியை தழுவுகின்றன.. இந்தப்படங்களை பொறுத்தவரை பேய்களின் பயமுருத்தலும், அவற்றுக்கான வலுவான பிளாஸ்பேக் காட்சிகளும் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைப்பது உறுதி.. இல்லையென்றால் மக்களுக்கு பேய்ப்படம் என்றாலே அலர்ஜி ஏற்பட்டு, பின் பேய்களை அவர்கள் துரத்தி அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பேய்ப்(பட இயக்குனர்)களே ஜாக்கிரதை..!