ஹீரோ – விமர்சனம்

சிறுவயதில் நன்றாகப் படிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஒருகட்டத்தில் தனது பிளஸ்டூ மார்க்ஷீட்டை விற்று தனது தந்தையை காப்பாற்றும் சூழல் ஏற்படுகிறது இதனால் தந்தையின் கோபத்துக்கு ஆளாகி படிப்பையும் கைவிட்டு ஒரு கட்டத்தில் டூப்ளிகேட் சான்றிதழ் தயாரிக்கும் ஒரு ஆளாகவே மாறிவிடுகிறார்.. எதிர்பாராத ஒரு சூழலில் தனது தங்கை ஒருவருக்கு மிகப்பெரிய கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுப்பதற்காக தங்கையின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அவர் ஒரு காரியம் செய்யப் போக அது அந்த தங்கையின் உயிருக்கே உலை வைக்கிறது.

அதுமட்டுமல்ல, அவருடன் சேர்ந்து படித்த மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் மிகப்பெரிய பேராபத்தை இழுத்துக் கொண்டு வருகிறது இதனால் அதிர்ச்சியடையும் சிவகார்த்திகேயனுக்கு அந்த ஆசிரியர் அர்ஜுன் மூலமாக இதன் பின்னணியில் கொடூரத்தனமாக செயல்படும் வில்லன் யார் என்பதும் எதற்காக இந்த செயல்களில் ஈடுபடுகிறார் என்பதும் தெரியவரும்போது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.

சக்திமனின் தீவிர ரசிகரான அவருக்கு ஆபத்தில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் தான் சக்திமனாக மாறவேண்டும் என புரிகிறது. இதையடுத்து அர்ஜுனுடன் இணைந்து மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளியான வில்லனுடன் மோதுவதற்கு தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார் சிவகார்த்திகேயன்.. அவரால் எதிரியின் திட்டங்களை தவிடு பொடியாக்க முடிந்ததா அதற்காக ஏதேனும் இழப்புகளை மீண்டும் சந்தித்தாரா என்பதே மீதிக்கதை.

இந்த படத்தை கண்டுபிடிப்புகளின் கதை மற்றும் படிக்காத மேதைகளின் கதை என இரண்டு களங்களில் இணையாக நகர்த்திக்கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் மித்ரன்.. சிவகார்த்திகேயன் தன்மீது விழுந்துவிட்ட காமெடி முத்திரையை ஒதுக்குவதற்கு கவனமாக இந்த படத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.. ஆரம்பத்தில் தான் செய்யும் தவறான வேலைகளுக்கு தானே ஒரு சப்பைக்கட்டு காரணம் சொல்லிக் கொள்வதும், ஆனால் அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றது என்பதை அறிந்துகொண்டு நியாயமான வழியை தேர்ந்தெடுப்பதும் அதன்பிறகு தொடர்ந்து எதிர்ப்புகளையும் பிரச்சனையும் சம்பாதிப்பது என படம் முழுக்க நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

குறிப்பாக ஆரம்பகட்ட சண்டைக்காட்சிகளில் வீராவேசம் காட்டாமல் கதைக்கு ஏற்றபடி ஒத்துழைத்து சூப்பர் ஹீரோவாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக் கொள்ளும் காட்சிகளில் இயக்குனருடன் சேர்ந்து அழகாக ஒத்துழைத்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு சமமான மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கிட்டத்தட்ட ஒரு விஞ்ஞானிக்கு இணையான ஆசிரியர் கதாபாத்திரத்தில் இதுவரை பார்க்காத புதிய அர்ஜுன் நம்மை ஆச்சரிய படுத்துகிறார் குறிப்பாக இவரது கதாபாத்திரம் பள்ளிப்பாடங்களில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கின்ற அதேசமயம் தனித்திறமைகளை தங்களிடம் ஒளித்து வைத்திருக்கின்ற சராசரி மாணவர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியை கொடுப்பதாகவும் அப்படிப்பட்ட மாணவர்களை உதாசீனப்படுத்தும் பெற்றோர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி தமிழில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கிறார்.. நடிப்பதற்கு மிகப்பெரிய அளவுக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் இவருக்கு காத்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. சிவகார்த்திகேயனின் தங்கையாக கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் ஒட்டிக் கொள்கிறார் இவானா. சிவகார்த்திகேயன் கூடவே பயணிக்கும் காமெடி, சென்டிமென்ட் கலந்த கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் சரியாக பிட் ஆகிறார்.. வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோல் வழக்கம்போல ஒரு ஹைடெக் கார்ப்பரேட் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த படத்தை பிரம்மாண்டப்படுத்தியதில் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸுக்கும் மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் சம்பந்தமாக வரும் காட்சிகளில் பிரமிக்க வைக்கின்றன. கலை இயக்குனர் மற்றும் கிராபிக்ஸ் குழுவினரின் பங்களிப்பும் ரொம்பவே அதிகம்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கேற்ற வகையிலான கல்வியை அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்பதை இந்த படத்தில் வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் பிஎஸ் மித்ரன். அதேசமயம் பல இடங்களில் அனைவருக்கும் பாடம் எடுக்கிறேன் என அர்ஜுன் மற்றும் சிவகார்த்திகேயன் மூலமாக பக்கம் பக்கமாக வசனங்கள் பேச வைத்திருப்பது ஒரு கட்டத்தில் அலுப்பைத் தருகிறது..

மேலும் கடைசி கால் மணி நேர கிளைமாக்ஸ் காட்சி காதில் முழம் முழமாக பூச்சுற்றும் முயற்சி.. அதேசமயம் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தை நம்மிடம் ஏற்படுத்தாமல் இல்லை.. சமூக பொறுப்புடன் கூடிய, அதேசமயம் பெற்றோர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒரு படமாக இதை உருவாக்கிய இயக்குனர் மித்ரனுக்கு நமது தாராள பாராட்டுக்கள்.