ஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்

hnpp
செல்போன் வழியாக வந்து சித்தரவதை செய்யும் பேயை இந்தப்படத்தில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

சின்னசின்ன திருட்டுகளை செய்துகொண்டே இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷை காதலிக்கிறார் வைபவ். இந்த காதலுக்கு ஐஸ்வர்யாவின் அண்ணன் விடிவி கணேஷும் பச்சைக்கொடி காட்டுகிறார்.. இந்த நிலையில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி மரணமடையும் ஓவியாவின் செல்போன் கீழே விழ, அதை அபேஸ் பண்ணிக்கொண்டு வருகிறார் வைபவ்..

அவரிடம் செல்போன் இருப்பதால் இறந்துபோன ஓவியாவும் பேயாக மாறி வைபவ் வீட்டுக்கே வருகிறார். வைபவ், விடிவி கணேஷ், அவரது தம்பி சிங்கப்பூர் தீபன் இவர்களை கலவரப்படுத்தி கதற வைக்கிறார்.. இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷின் மீது புகுந்துகொண்டு, தனது காதலனனான டாக்டர் கருணாகரனை அழைத்து வா என ஆணையிடுகிறார்..

ஓவியாவின் காதலனான கருணாகரன், சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்னொரு பெண்ணிற்கு தாலி கட்டுகிறார். நிறைவேறாத ஆசையுடன் இறந்துபோன ஓவியா, தனது ஆசையை நிறைவேற்ற வைபவ், ஐஸ்வர்யா அன் கோவை ஆட்டிவைத்து எடுக்கும் முயற்சி தான் மீதிப்படம்.. ஓவியாவின் திட்டம் பலித்ததா..? ஆசை நிறைவேறியதா…? என்பது க்ளைமாக்ஸ்.

கொலை, கொடூர பழிவாங்கல் இல்லாமல் மீடியமான பேயின் டார்ச்சர்களை மட்டுமே வைத்து சிரிப்பு பேய்ப்படமாக எடுத்துள்ளார்கள். கதையின் ஹீரோ வைபவ் தான் என்றாலும் மொத்த கலாட்டாவையும் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறார் விடிவி கணேஷ். வைபவின் நண்பனாக வரும் யோகிபாபு, விடிவியின் தம்பியாக வரும் சிங்கப்பூர் தீபன் இருவரும் சேர்ந்துகொண்டு இன்னும் கலகலப்பூட்டுகிரார்கள்.

பேயோட்டும் ‘கேம் சாமியாராக பத்து நிமிடம் வரும் அலப்பறை மந்திரவாதி’ சிங்கம்புலி கோலிக்குண்டு காமெடியில் விலா குலுங்க சிரிக்க வைக்கிறார். கருணாகரனுக்கு இதில் சீரியஸ் வேடம் என்றாலும், அவரை கலாய்த்து நம்மை சிரிக்க வைக்கிறார்கள். படத்தின் நாயகி ஐஸ்வர்யா வழக்கமான ஹீரோயினாக வந்து, பேய் பிடித்ததும் நடிப்பில் புதிய முகம் காட்டுகிறார். அந்த கண்கள் அவருக்கு உதவியாக நிற்கின்றன. அழகுப்பெண் ஓவியாவை இப்படி பேயாக மாற்றிவிட்டீர்களே பாஸ்(கர்)..! இருந்தாலும் செம மிரட்டு மிரட்டுகிறார். கருணாகரனின் மனைவியாக கிளைமாக்ஸ் சென்டிமென்ட்டில் நெகிழ வைக்கிறார் மதுமிதா.

பேய்ப்படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்பார்கள்.. அதனால் தான் அழைக்கும் நபரின் எண்ணே தெரியாமல் ஓவியாவின் செல்போன் அடிக்கும்போதெல்லாம், ஒவியாதான் பேயாக இருக்கிறாரே, அப்புறம் யார் போன் செய்வது என அவ்வப்போது எழும் கேள்விகளை எல்லாம் அப்போதே மூட்டைகட்டி விடவேண்டும்.

ஓஹோவென மிரட்டாவிட்டாலும் கூட, ஜாலியாக சிரித்து, கொஞ்சம் பயந்துகொண்டே பார்க்க இது பொருத்தமான படம் தான்.