சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

இன்று சூர்யாவிற்கு பிறந்தநாள்.. சினிமாவை நேசிப்பவர் என்பதைவிட சுவாசிப்பவர் என்று சூர்யாவை சொன்னால் சரியான வார்த்தையாக இருக்கும். காரணம் சினிமாவில் வருடந்தோறும் எத்தனையோ வாரிசு நடிகர்கள் அடியெடுத்து வைக்கிறார்கள்.. பலர் முதல் படத்துடனும், இன்னும் சிலர் சில வருடங்களிலும் சினிமாவை விட்டு காணாமல் போய்விடுகின்றனர்..

அதாவது தங்கள் அடையாளத்தை தொலைத்து விடுகின்றனர்.. ஆனால் சினிமா என்பது என்ன, அதில் நம் பங்கு என்ன என்பதில் தெளிவாக இருக்கும் வெகு சிலரே, அந்த வாரிசு வட்டத்தை உடைத்துக்கொண்டு தனக்கான அடையாளத்தை முன்னெடுத்து ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மனதிலும் இடம் பிடிக்கின்றனர்..

அப்படி ஒருவர் தான் நடிகர் சூர்யா.. மிகப்பெரிய நடிகரின் வாரிசாக அறிமுகமானாலும் கூட, சினிமாவில் எப்படி நடப்பது என்பதை தந்தை போட்டுத்தந்த பாதையிலும், எப்படி நடிப்பது என்பதை தானே தீர்மானித்துக்கொண்ட பாதையிலும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருபவர்.

அதனால் தான் ஒரு ‘மாஸ்’ ஹீரோவாக வளர்ந்தபின்னும் கூட எந்த பட்டங்களையும் சூடிக்கொள்ளாமல் இயல்பாக வலம்வர இவரால் முடிகிறது. அதனால் தான் வெற்றி தோல்வி இரண்டையும் சரிசமமாகவே எடுத்துக்கொள்ள இவரால் முடிகிறது.

இன்னொரு பக்கம் ஏதோ நடித்தோம் சம்பாதித்தோம் என்றில்லாமல், தந்தையின் வழியை பின்பற்றி ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிக்கரம் நீட்டி வருவதில் தான் மற்ற நடிகர்களிடம் இருந்து சூர்யா தனித்து தெரிகிறார்..

கடந்த சில வருடங்களாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி திறமையானவர்களுக்கு வாய்ப்பும் கொடுத்து வருகிறார். இதோ சமீபத்திய அவரது தயாரிப்பாக வெளியாகியுள்ள, விவசாயித்தின் மேன்மையை, கூட்டுக்குடும்பத்தின் அருமையை பேசுகின்ற படமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சினிமாவில் நுழைந்து 19 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள, இன்று பிறந்தநாள் காணும் சூர்யாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.