ஹேப்பி பர்த்டே ஜி.வி.பிரகாஷ்..!


‘வெயில்’ படத்தில் தொடங்கி வெற்றிகரமாக தனது இசைப்பயணத்தில் கால் சதத்தை தாண்டிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகன் என்கிற அடையாளத்தை தனது அறிமுகத்திற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் இந்த அளவுக்கு வளர்ந்தது எல்லாம் தன் திறமையினால மட்டுமே.

கமல் தவிர, சூப்பர்ஸ்டார் படம் முதற்கொண்டு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களுக்கும் இசையமைத்த ஜி.விபிரகாஷ் கடந்த வருடம் இந்தியிலும் வெற்றிகரமாக கால்பதித்துவிட்டார். அடுத்து ஹாலிவுட்டிலும் களம் இறங்க இருக்கிறார்.

தயாரிப்பாளராக மாறுவதற்கு தனியாக நெஞ்சுரம் வேண்டும். தனக்கு அதுவும் அதிகமாகவே இருக்கிறது என மதயானை கூட்டம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி நிரூபித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். நடிப்பிலும் ஒரு கை பார்த்துவிடுவோமே என தற்போது கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இது தவிர இன்னொரு படமான ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். கடந்த வருடம் தனது காதல் மனைவியாக பின்னணி பாடிகி சைந்தவியை கரம்பிடித்த வேளை ஜி.விக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான்.

இன்று பிறந்தநாள் காணும் ஜி.வி.பிரகாஷுக்கு நமது behind frames தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.