ஹேப்பி பர்த்டே பிந்து மாதவி…!

பார்ப்பதற்கு சில்க் மாதிரியே இருக்கிறார் என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் கண்ணழகி பிந்துமாதவி. இந்தப்பெண்ணிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது எனும்படியாக பிந்துமாதவியை திரும்பி பார்க்கவைத்தது நிச்சயமாக ‘கழுகு’ திரைப்படம்தான். இந்தப்படத்தில் அவர் நடித்ததைவிட அவரது கண்கள்தான் அதிகம் பேசியது.

தொடர்ந்து வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்குராஜா’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ என வரிசையாக வந்த படங்கள் பிந்துமாதவியின் நடிப்பை மெருகேற்றி இருப்பதுடன் தமிழ்சினிமாவில் அவருக்கு முக்கியமான இடத்தையும் தந்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. இதுதவிர சமீபகாலமாக தனது எதார்த்தமான நகைச்சுவையான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் அட்டகத்தி தினேஷ் ஜோடியாக நடித்திருக்கிறார். நகுல்-ஐஸ்வர்யா தத்தா என இன்னொரு ஜோடியும் உண்டு. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது ‘கழுகு’ சத்யசிவா இயக்கும் புதிய படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் ஜோடியாக நடிக்கும் ‘வசந்தகுமாரன்’ படமும் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இப்படி நிதானமாக, அதேசமயம் கவனமாக வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைத்து முன்னேறிவரும் பிந்துமாதவிக்கு இன்று பிறந்தநாள்.

தமிழ்சினிமாவில் இன்னும் சில சாதனைகளை நோக்கி பிந்து மாதவியின் பயணம் அமையட்டும் என அவரது பிறந்த நாளான இன்று நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.