ஆனந்தக்கண்ணீரில் ‘அருவி’ அஞ்சலி..!

aruvi anjali

சமீபத்தில் வெளியாகி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ‘அருவி’.. இதில் கதாநாயகியாக நடித்த அதிதி பாலனுக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிகிறது என்றால் இன்னொருபக்கம் அவருக்கு தோழியாக நடித்துள்ள திருநங்கை அஞ்சலிக்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

“இந்த படத்தில் நான் எமிலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றேன். சில காட்சிகளில் எனக்கு நடிப்பு வரவில்லை அதை இயக்குநர் ஒரு முறைக்கு பத்து முறை முயற்சி பண்ணுங்கள் என்று தட்டி கொடுத்தார். படத்தின் கதாநாயகி என்னை சகமனுஷியாக நினைத்து என்னிடம் ரொம்ப அன்பாக பழகினார். அதுமட்டுமல்ல படப்பிடிப்பு தளத்தில் நான் திருநங்கை என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரும் நட்பாக பழகினார்கள்.

பொதுவாக திருநங்கைகள் பற்றி பல திரைப்படங்களில் கேலி கதாபாத்திரமாக வைத்திருப்பார்கள் ஆனால் அருவி திரைப்படத்தில் திருநங்கை என்ற பாகுபாடு இல்லாமல் ஒரு பெண்ணோடு என்னையும் சேர்த்து ஒரு கதாப்பாத்திரமாக தான் கொண்டு வந்தார்கள். ஒரு திருநங்கையும், ஒரு பெண்ணும் எப்படி நட்பு ரீதியாக பழகிக்கொள்கிறார்கள் தன்னுடைய சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றையும் எப்படி பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற விஷயம் இருக்கும்.

திருநங்கைகளின் நடவடிக்கை அவர்கள் வாழும் சூழல் பொறுத்தது. எனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி எனக்கு சகோதரியாகவும், தோழியாகவும் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை பொன்னி உள்ளார். அவர் தான் எனக்கு பரத நாட்டிய குரு. பரத நாட்டியம் கீழ் தட்டு மக்களுக்கு எட்டாத கனியாக இருப்பதினால் அணைத்து தரப்பினருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதற்காக வியாசர்பாடி பகுதியில் பரதம் கற்று கொடுத்து கொண்டு இருக்கின்றோம். வீணை கற்றுள்ளேன் அதையும் மற்றவர்களுக்கு கற்று கொடுக்கின்றேன்´என தொடர்ந்து ஆச்சர்யம் தருகிறார் அஞ்சலி.