ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள ‘எனக்கெனவே’ ஆல்பத்துக்கு குவியும் பாராட்டுக்கள்..!

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ‘எனக்கெனவே’ என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியுள்ள இப்பாடலுக்கு கணேசன் சேகர் என்பவர் இசையமைத்துள்ளார். கார்த்திக் ஸ்ரீ என்பவர் இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார். இப்பாடலில் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் ராகேஷ் ராஜன் ஆகியோர் கதாநாயகி, கதாநாயகனாக நடித்துள்ளனர்.

இப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன் அவளிடம் தன்னுடைய காதலை வித்யாசமாக ப்ரபோஸ் செய்வது போல் அமைந்துள்ள கிளைமாக்ஸ் காட்சி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் உள்ள பலரையும் இந்த பாடல் கவர்ந்துள்ளது. குறிப்பாக, நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி கல்ராணி, சஞ்சனா ஷெட்டி, சாந்தனு பாக்யராஜ், ஹரிஷ் கல்யாண், கயல் சந்திரன், நட்சத்திர மேலாளர் ஜெகதிஷ் மற்றும் திரையுலகத்தினர் பலர் இப்பாடலை பாராட்டியுள்ளனர்.

கயல் சந்திரன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் கார்த்திக் ஸ்ரீயின் முதல் படத்துக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்களுடைய வெள்ளித்திரை படைப்புக்காக தயாராகி வரும் இக்குழுவுக்கு இது மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.