குரு சோமசுந்தரத்திற்காக காட்சிகளை திருத்திய வஞ்சகர் உலகம் இயக்குனர்..!

vanjagar ulagam

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்’. மஞ்சுளா பீதா தயாரித்துள்ள இப்படத்தில், புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசையில், ஆண்டனியின் படத்தொகுப்பில், ஏ.ராஜேஷின் கலை இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.

காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம், ஜான் விஜய் என சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ தான் இப்படத்தில் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுமார் 25 நிமிட காட்சிகளை படக்குழுவினர் திரையிட்டு காட்டினார்.

படம் குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில், ”இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். `வஞ்சகர் உலகம்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். குறிப்பாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பாற்றலை கண்டு வியந்தேன்.

குரு சோமசுந்தரம் இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருக்கிறார். . ஒரு குறிப்பிட்ட 5-6 நிமிட காட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து எல்லோரையும் மிரளவைத்தார். அவரது அபார நடிப்பாற்றலால் கதையில் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருந்தது” என கூறினார். இந்தப்படம் வரும் செப்-7ஆம் தேதி வெளியாகவுள்ளது.