தர்மபத்தினி வாரிசுகள் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’


குடும்பக்கதை அம்சம் கொண்ட படங்களுக்கு வரவேற்பு எப்போதும் இருக்கிறது என்பதை விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் நிரூபித்துள்ளன. அந்த வகையில் காதல், காமெடி, ஆக்சன் உணர்வுகள் என அனைத்தும் நிறைந்த அழகான குடும்ப கதையாக ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படம் தயாராகிறது.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இந்தப்படத்தில், கௌதம் கார்த்திக், சேரன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கதாநாயகியாக டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் சிவாத்மிகா நடிக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த முப்பது வருடங்களுக்கு முன் வெளியான தர்மபத்தினி படத்தில் கார்த்திக்-ஜீவிதா ஜோடியாக நடித்திருந்தனர். இப்போது அவர்களது வாரிசுகள் ஜோடியாக நடிக்கின்றனர்.

மேலும் இந்தப்படத்தில் சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் துவங்கியது. கௌதம் கார்த்திக், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் அழகான பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது