17 மணி நேரம் நான்ஸ்டாப்பாக டப்பிங் பேசிய கவுண்டமணி..!

 

கவுண்டமணியின் ரீ-என்ட்ரியில் முதலாவதாக களம் இறங்க காத்திருக்கும் படம் தான் ‘வாய்மை’. இயக்குனர் செந்தில்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராம்கி மற்றும் தியாகராஜனும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். சாந்தனு பாக்யராஜ், பிரித்வி பாண்டியராஜன், மனோஜ் கே.பாரதி என மூன்று ‘பா’ வரிசை இயக்குனர்களின் வாரிசுகளும் நடத்திருப்பது மகா ஆச்சர்யம்.

இவர்கள் தவிர முக்தாபானு, ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மன்னவா, ஆயுதபூஜை படங்களைப்போல இந்தப்படத்திலும் கவுண்டமணி-ஊர்வசி காம்பினேஷனில் காமெடி போர்ஷன் ரகளையாக உருவாகி இருக்கிறதாம்.. இதில் கவுண்டமணிக்கு ‘பென்னி’ என்கிற இதய அறுவை சிகிச்சை டாக்டர் வேடம்.

சமீபத்தில் இந்தப்படத்திற்காக டப்பிங் பேசிய கவுண்டமணி ஒரே நாளில் 17 மணி நேரம் டப்பிங் பேசி அங்கிருந்தவர்களை அசரவைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் உட்கார்ந்துகொண்டே டப்பிங் பேசட்டும் என நாற்காலியை கொண்டுவந்து போட, அதை மறுத்துவிட்டு அவ்வளவு நேரமும் நின்றுகொண்டே தான் டப்பிங் பேசினாராம். ரீ-என்ட்ரி என்பதால் தனது முழு உழைப்பையும் இதில் கொட்டியிருக்கிறாராம் கவுண்டமணி.