கொரில்லா – விமர்சனம்

பிக்பாக்கெட், போலி டாக்டர் என திருட்டு வேலைகள் செய்பவர் ஜீவா. அவரது நண்பர்கள் சதீஷ் மற்றும் விவேக் பிரசன்னா.. ஜீவாவுக்கு கூடப்பிறக்காத தம்பியாக எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொள்கிறது ஒரு சின்ன கொரில்லா. இந்த நிலையில் பெரிய அளவில் ஏதாவது செய்து பணம் சம்பாதித்து செட்டிலாக நினைக்கிறார் ஜீவா. அதற்கேற்றாற்போல் இன்னொரு நபரும் கூட சேர்ந்து கொள்ள, வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர்.

ஆரம்பத்தில் முகமூடி மாட்டிக்கொண்டு வங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், போதுமான அளவு பணம் இல்லாததால் போலீசார் மூலமாக 20 கோடி ரூபாய் வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் ஜீவா குழுவினர். இந்த நிலையில் கடன் பிரச்சினையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை வங்கியில் உள்ள டிவியில் பார்க்கும் ஜீவா திடீர் மனமாற்றத்தால், பணம் வேண்டாம், அதற்கு பதிலாக விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என்ன கோரிக்கையை மாற்றுகிறார்.

அதை வலுப்படுத்தும் விதமாக ஏதேச்சையாக வங்கிக்கு வந்த மத்திய மந்திரியின் மகனை சிறைபிடித்து பணயக் கைதியாக்குகிறார்.. ஜீவா முதலில் கேட்ட தொகை கிடைத்ததா அல்லது விவசாயிகளின் கடன் பிரச்சனை தள்ளுபடி செய்யப்பட்டதா..? இல்லை போலீசாரின் பிடியில் அனைவரும் சிக்கினார்களா..? இதில் அந்த கொரில்லாவின் பங்கு என்ன என்பது மீதி கதை..

ஜீவாவுக்கு இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒரு ரெடிமேட் சட்டை தான் ஆனால் கதையிலும் கதாபாத்திரத்திலும் வலுவில்லாததால் ஜீவாவுக்கு இன்னும் ஒரு நல்ல படம் கிடைத்து இருக்கலாமே என்கிற எண்ணம் தான் ஏற்படுகிறது ஒரு நல்ல நடிகனின் திறமை கண் முன்னே வீணடிக்கப்படுவதை பார்க்கும்போது ஏற்படும் வருத்தத்தை தான் இந்த படத்தின் மூலம் ஜீவா நமக்குத் தருகிறார்.

கதாநாயகி ஷாலினி பாண்டே தொட்டுக்க ஊறுகாய் போல ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்வதால் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.. யார் பேசினாலும் அவர்கள் பேசுவதை இடைமறித்து பேசுவது தான் காமெடி என நினைத்துக் கொண்டிருக்கும் சதீஷ் எப்போது தன்னை மாற்றிக்கொள்வாரோ அல்லது எந்த இயக்குனர் அவரை மாற்றுவாரோ கடவுளுக்கே வெளிச்சம்.

இடைவேளைக்கு பிறகு என்ட்ரி கொடுக்கும் யோகிபாபு மற்றும் ராதாரவி இவர்கள் இருவரும் தான் அவ்வப்போது காமெடி ஏரியாவில் கொஞ்சம் கலகலப்பூட்டி நம்மை ரிலாக்ஸ் செய்கிறார்கள். விவேக் பிரசன்னாவின் கெட்டப்பும் அவரை சாதாரணமாக பயன்படுத்தி இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.

படத்தின் தலைப்பு கொரில்லா என்று வைக்கப்பட்டிருந்தாலும் சிம்பன்சி இடம்பெறும் காட்சிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. ஆனால் அந்த குறைவான நேரத்திலும் ஓரளவு சேட்டைகளால் நம்மை கவர்கிறது இந்த கொரில்லா. அதேசமயம் அதற்கு இன்னும் காட்சிகளை அதிகப்படுத்தி திரைக்கதையை கொரில்லா மூலமாக பயணிக்க வைத்து இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடி இருக்கும்.. குழந்தை ரசிகர்களையும் இந்தப் படம் கவர்ந்திருக்கும்..

பணம் சம்பாதிக்கும் நோக்கமுள்ள ஜீவா திடீரென விவசாயிகள் பக்கம் தன் பார்வையை திருப்புவது ஏற்கும்படியாக இல்லை. ஆனால் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதும் அரசியல்வாதி யாரோ ஒருவரின் குடும்ப வாரிசுக்கு சிக்கல் என்றால் அவரை காப்பாற்ற அரசு எந்திரம் துடிப்பதையும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

இவர்கள் வங்கியை கொள்ளை அடிக்கும் செயலில் ஈடுபட்டதைவிட ஏடிஎம்மில் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்லும் வாகனத்தை வழிமறித்து பணம் பறிக்க முயற்சி செய்யும் அந்த ஆட்டம் சிறப்பாக இருந்தது.. அதுபோல ஏதாவது முயற்சி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. இயக்குனர் டான் சாண்டி கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.