கோலி சோடா – விமர்சனம்

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு மினி வேனுக்காக காத்திருந்தபோது லோடுமேன்கள் மாணிக்கமும் சூசையும் பேசிக்கொள்வதை கேட்க நேர்ந்தது. அதை அப்படியே உங்களிடம் ஒப்புவிக்கிறோம்

மாணிக்கம்: ஏம்ப்பா சூசை.. எங்கப்பா காலைல இருந்து ஒன்ன ஆளப் பாக்கவே முடியல..?

சூசை: நம்ம பூக்கடை ரோஸ்மேரி இல்ல.. அதுகூட கோலிசோடா’ படத்துக்கு போய்ட்டேன்பா..

மாணிக்கம்: ஏம்ப்பா நம்ம கோயம்பேடு மார்க்கெட்ல வந்து ரொம்பநாளு படம் புடிச்சுட்டு போனாங்களே.. அந்தப்படமா..?

சூசை: ஆமாம்பா.. அதேதான்..

மாணிக்கம்: நான் ஒரு ரெண்டுநாளு தான் ஷூட்டிங் பாத்தேன்.. அப்பாலதான் ஊருக்கு போய்ட்டேனே. ஆமா என்னா கத?

சூசை: நாலு சின்னப்பசங்க மூட்டதூக்கி பொழைக்கிறாங்க. அதாம்ப்பா.. கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ்ன்னு ‘பசங்க’ படத்துல பாத்த அதே பசங்கதாம்ப்பா. அப்ப மார்க்கெட்ல இருக்குற ஆச்சி அவங்களுக்கு சாப்பாட்டுக்கடை வச்சுக்கொடுத்து பொழப்புக்கு வழி பண்ணித்தருது..

மாணிக்கம்: அட நம்ம விக்ரமன் படம் மாதிரி இருக்கேப்பா..?

சூசை: படம் கால்மணி நேரம் போறவரைக்கும் நானும் அப்படித்தான்பா நெனைச்சேன்.. ஆனா டக்குனு ரூட்டை மாத்திட்டாருப்பா டைரக்டரு..

மாணிக்கம்: அப்படி என்னாப்பா பண்ணிருக்காரு.?

சூசை: மார்க்கெட்ல் வட்டிக்கு விடுற நாயுடு, ஆச்சியோட நல்ல மனசுக்காக தன்னோட குடோன்ல கடை வச்சுக்க சொல்லி பசங்களுக்கு ஃப்ரீயாவே இடம் குடுக்குறாரு.. ஆனா அவரோட அல்லக்கை ஒருத்தன் ஆளுகளோட சேந்துக்கிட்டு பசங்களோட ஓட்டல்ல தண்ணியப்போட்டுட்டு படுத்து தூங்குறாங்க.. இதனால ஏவாரம் கெடுறது பசங்களுக்கு புடிக்கல.. கோபத்துல ஒருநாள் தட்டிக்கேக்குறப்ப வர்ற கலாட்டாவுல நாயுடுவோட ஆளையே நாலு பசங்களும் அடிச்சுடுறானுங்க.. மார்க்கெட்டையே கைக்குள்ள வச்சிருக்குற நாயுடு சும்மா இருப்பாரா..?

மாணிக்கம்: அதெப்படி லாடம் கட்டிர மாட்டாரு..?

சூசை: முதல்ல லாடம் கட்டுறாரு தான்.. ஆனா நம்ம பசங்க கில்லி மாதிரி இருக்கானுங்கப்பா.. நானே அசந்துட்டேன்.. சரி..சரி.. முழுக்கதையும் சொல்லிட்டா ஒனக்கு இண்ட்ரெஸ்ட் போய்ரும்.. நீயே போய் பாரு..

மாணிக்கம்: நான் போய் பாக்குறதுக்கு நாலு நாளாகும்பா.. ஆமா அந்த நாலு ‘பசங்க’ எப்படிப்பா நடிச்சுருக்காங்க..? எனக்கு கூட ஷூட்டிங்கப்ப ஆட்டோகிராப்லாம் போட்டுத்தந்தாங்க..

சூசை: எப்பா.. நாலுபேருமே மெரட்டுறாங்கப்பா.. நீ இதுக்கு முன்னாடி பெரிய ஆளுங்களோட ஆக்‌ஷன் படந்தான பாத்திருப்ப.. அதுக்கு ஈக்குவலா இதுல பண்ணிருக்காங்கப்பா.. ஆனா சின்னப்பசங்களால இத பண்ணமுடியுமான்னு கேக்கமுடியாத அளவுக்கு கரெக்டா இருக்குதுப்பா.. இதுல ரெண்டு பேரு லவ்ஸ் வேற பண்றாங்க..

மாணிக்கம்: பருத்திவீரன்ல நடிச்சதேப்பா ஒரு அம்மா.. ஷூட்டிங்ல கூட எங்க கடைக்கு பக்கத்துக்கடைல தான் அந்த அம்மா எவாரம் பாக்குற மாதிரி சீன்லாம் எடுத்தாங்க..

சூசை: யாரு பருத்திவீரன் சுஜாதாவா..? எப்பா இந்தக்கதைக்கு அந்த அம்மாதான் கதாநாயகின்னே சொல்லலாம்.. படம் முழுக்க வர்றாங்க. பசங்களுக்கு உதவி செய்யப்போயி நாயுடு வீட்ல பணயக்கைதியா ஒக்கார வேண்டிய சுச்சுவேஷன்ல.. சும்மா சொல்லக்கூடாதுப்பா அந்தம்மா பிச்சு ஒதறிருச்சு.

மாணிக்கம்: இதுல நம்ம இமான் அண்ணாச்சி எங்க வர்றாப்புல..?

சூசை: ஏய் அவர்தாம்ப்பா படத்தோட காமெடியனே.. பத்துக்கு எட்டு சீன்ல நம்மள சிரிக்க வச்சிர்றாருப்பா.. அப்புறம் ஸ்கூல் போற ரெண்டு சின்னப்பொண்ணுங்க.. அதுல ஒண்ணு ஆச்சியோட பொண்ணா நடிச்சிருக்கு பேரு சாந்தினின்னு சொன்னாங்க.. இன்னொரு சோடாப்புட்டி கண்ணாடிபோட்ட பொண்ணும் இருக்குப்பா. என்னம்மா மிரட்டுதுங்குற.. போய்ப்பாறேன்..

மாணிக்கம்: வட்டிக்கடை நாயுடு யாருப்பா?

சூசை: யாரு மதுசூதனனா? அட பேர் எப்டி தெரியும்னு கேக்குறியா. ஷூட்டிங்கப்பவே தெரியும்ப்பா.. ஏய்.. அவர்தான்ப்பா இந்தப்படத்துக்கே தூணு மாதிரி.. பசங்களுக்கு ஹெல்ப் பண்றப்ப நல்ல மனுஷன்யான்னு சொல்ல வச்சிட்டு அதுக்கப்புறம் தன்னோட ஆளையே அடிச்சுட்டாங்கன்னதும் தன்னோட இன்னோரு மொகத்தை காட்டுறாரு பாரு.. அதுலயும் அந்த க்ளைமாக்ஸ்.. சான்ஸ்சே இல்லப்பா..

மாணிக்கம்: மியூசிக் எப்புடி இருக்கு. நம்ம பவர்ஸ்டாரை வச்சு ஒரு பாட்டுகூட எடுத்துக்கிட்டு இருந்தாங்களே..

சூசை: பாட்டுக்கு எஸ்.என்.அருணகிரின்னு ஒருத்தரு.. பின்னணி இசைக்கு சீலின்னு ஒருத்தர்னு மொத்தம் ரெண்டுபேருப்பா.. பாட்டுல பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லன்னாலும் பின்னணி இசை நல்லாருக்குப்பா.. அதே மாதிரி வசனம் நம்ம பாண்டிராஜ் சார்தான் எழுதிருக்காருப்பா.. ஆதரவு இல்லாத பசங்க தங்களுக்கான அடையாளம் தேடுறதோட வலியை அப்படியே வார்த்தைகள்ல கொட்டிருக்காருப்பா.

மாணிக்கம்: டைரக்டர் யாருப்பா..?

சூசை: நம்ம கேமராமேன் விஜய் மில்டன் இருக்காருல்ல.. ஓ. அப்படிச்சொன்னா ஒனக்கு தெரியாதுல்ல.. பரத் நடிச்சு ‘அழகா இருக்குற பயமா இருக்கு’ன்னு ஒரு படம் நாம ரோகிணில பாத்தோமே.. அந்தப்படத்தை டைரக்ட் பண்ணுனவர்தான்ப்பா இந்தப்படத்தை டைரக்ட் பண்ணிருக்காரு.. கேமராமேனும் அவர்தான்ப்பா..

மாணிக்கம்: எப்டி.. இந்தப்படம் அவருக்கு ஓகே ஆயிருமா..?

சூசை: ஏய்.. நல்லா பண்ணிருக்காருப்பா.. பூட்டுன ரூமுக்குள்ள பூனைகூட புலியாகும்னு சொல்லுவாங்கள்ல.. அட நாலு எருமைக ஒண்ணா இருந்தா ஒரு சிங்கத்தையே அடிச்சு வெரட்டிரும்ல.. இங்க நாலு கன்னுக்குட்டிக ஒண்ணு சேந்து ஒரு சிஙகத்த வெரட்டுதுப்பா.. சின்னப்பசங்கள வச்சு விறுவிறுன்னு ஒரு ஆக்‌ஷன் படம் கொடுத்திருக்காருப்பா.. அதுலயும் அந்த க்ளைமாக்ஸ்ல என்ன நடக்கப்போகுதோன்னு நாம் நெனச்சுக்கிட்டிருக்கப்ப.. வச்சாரு பாரு ஒரு ட்விஸ்ட்.. அது என்ன்ன்னா….

மாணிக்கம்: போதும்ப்பா.. நீ ஒண்னும் சொல்லவேணாம்.. இந்தா இருக்கு பாரு ரோகிணி. தேட்டரு.. சாயங்காலமே என் சம்சாரத்தை கூட்டிட்டு கெளம்பிர்றேன்.. இப்பல்லாம் நல்ல படம் வர்றது அதிசயம்பா.. அதுனால இத பாக்காம விட்ரக்கூடாது.. சாயந்திரம் செட்டியாரு பணம் தருவாரு வாங்கி வச்சுரு.. நா நாளைக்கு வந்து வாங்கிக்குறேன்..

சூசை: நீ படத்துக்கு கெளம்புவேன்னு தெரியும்.. அதான் கைய்யோட ரெண்டு டிக்கெட்டை வாங்கிட்டு வந்துட்டேன். செட்டியார் குடுக்குற காசுல கழிச்சுக்கிறேன்.. கெளம்பு.. கெளம்பு.. சீக்கிரம்..

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>