பொன்விழா கண்ட மார்கண்டேயன்..!

தமிழ் திரையுலகில் எப்படி சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்தை குறிக்குமோ, அதேபோல் மார்கண்டேயன் என்றால் அது நடிகர் சிவகுமாருக்கு மட்டுமே சொந்தமாகிப்போன பெயராகும்.. சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலம் முதல் அவர் கதாநாயகனாக நடித்த படங்களில் எல்லாம் அவரது தோற்றம் அன்று கண்டதுபோல எந்தவித மாற்றமும் இல்லாமல் பொலிவுடன் இருந்தது தான் இந்தப்பெயர் அவருக்கு சூட்டப்பட காரணம்.

1965ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஏ.வி.எம்.தயாரித்த ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகுமாருக்கு இது பொன்விழா ஆண்டு. சிவகுமார் கிட்டத்தட்ட 193 படங்களில் நடித்துள்ளார் என புள்ளிவிபரம் சொல்கிறது. ஒவ்வொன்றிலும் விதவிதமான கதாபாத்திரங்கள், ஏன் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடித்து தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்திக்கொண்டவர்.

இன்றும் கூட முருகக்கடவுளாக நடிப்பதற்கு சிவகுமாரை தவிர வேறு ஒரு பொருத்தமான நபரை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. 1966ல் சத்யா மூவிஸ் தயாரித்த ‘காவல்காரன்’ படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடித்தார் சிவகுமார். அதன்பின் உயர்ந்த மனிதன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு மகனாக நடித்தபோது, மீண்டும் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை எம்.ஜி.ஆரே தர முன் வந்தார். ஆனால் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பால் எம்.ஜி.ஆருடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு கைநழுவிப்போனது.

சிவகுமாரின் திறமைக்கு சவாலாக அமைந்த படம் காரைக்கால் அம்மையார். இதில் அவர் சிவனாகவும் ஸ்ரீவித்யா பார்வதியாகவும் நடித்தனர். இதில் தகதக தகதக என ஆடவா… சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா…என்று உணர்ச்சியோடும் வேகத்தோடும் கே.பி.சுந்தராம்பாள் பாட சிவகுமாரும் ஸ்ரீவித்யாவும் துரிதகதியில் வேகமாகச் சுழன்று சுழன்று ஆடவேண்டும். இதற்காக ஒரே வாரத்தில் நடனம் பயின்று ஸ்ரீவித்யாவின் நடனத்துக்கு ஈடுகொடுத்து ஆடி அசத்தினார் சிவகுமார்.

சிவகுமார் நடித்த 193 படங்களில் 152 தயாரிப்பாளர்களுடனும், 98 டைரக்டர்களுடனும் பணியாற்றியுள்ளார்.அவருடன் நடித்த கதாநாயகிகள் 87 பேர். அவருக்குப் பிறகு திரைப்படங்களில் அறிமுகமாகி, அவருக்குஜோடியாக அதிகபடங்களில் நடித்தவர்கள் லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, சுஜாதா, சரிதா, அம்பிகா, ராதிகா ஆகியோர். இந்தப்பட்டியலிலும் சிவகுமாருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி தான்.

2001ல் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் நடித்ததோடு தனது நடிப்பு பயணத்தை நிறுத்திக்கொண்ட சிவகுமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல ஏழை மாணவர்களுக்கு உதவும் விதமாக அகரம் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளையை நிறுவி 35 வருடங்களாக மிகப்பெரிய கல்விச்சேவையும் ஆற்றி வருகிறார். ஒரு நடிகராக சினிமாவில் நுழைந்து இன்று பொன்விழா கொண்டாடும் சிவகுமார் என்கிற மாமனிதரை ஒரு நடிகராக நினைத்து வாழ்த்துவதை விட, ஒரு மிகச்சிறந்த மனிதராக பார்த்து வணங்குவதுதான் சரியாக இருக்கும்.