காஸி – விமர்சனம்

gazhi review

தரையில் நாம் நிம்மதியாக உயிர்வாழ, தண்ணீருக்குள் தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டை காக்கும் வீரர்களின் சாகசம் கலந்த தியாகம் தான் இந்த ‘காஸி’ படம்..

கதைக்களம் பங்களாதேஷ் பிரிவினை சமயத்தில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது.. இந்தியாவின் மீதான கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆயுதம் தாங்கி கப்பலை அழிக்கும் முயற்சியாக ‘காஸி’ என்கிற அதி நவீன நீர்மூழ்கி கப்பலை அனுப்பி வைக்கிறது.

இந்த தகவல் உளவுத்துறை மூலமாக கிடைக்கவே அலர்ட்டான கடற்படை எஸ்-21 என்கிற நீர்மூழ்கி கப்பலை கே.கே.மேனன் தலைமையில் அனுப்புகிறது.. ‘காஸி’யை விட பலம் குறைந்த இந்த நீர்மூழ்கி கப்பலை வைத்துக்கொண்டு, திறமை வாய்ந்த கடற்படை வீரர்களான ராணா, அதுல் குல்கர்னி ஆகியோர் பாகிஸ்தானின் சதியை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை ரத்தமும் உணர்வும் கலந்து சொல்லி இருக்கிறார்கள்..

ராணுவ தாக்குதல்களை பல படங்களில் பார்த்து பழகி இருக்கும் ரசிகர்களுக்கு இந்த கடற்வழி தாக்குதலும் போராட்ட களமும் உண்மையிலேயே வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.. கடற்படையின் பணி என்ன, அவர்கள் திட்டமிடுதல் எப்படி, எதிரிகளை தாக்கும் தந்திரங்கள் என பல விஷயங்களை திரைக்கதைக்குள் புகுத்தி இரண்டு மணி நேரத்திற்கு நம்மை நகம் கடித்தவாறு, இருக்கை நுனியில் அமர்ந்து ஒருவித டென்சனுடனேயே படம் பார்க்க வைத்ததில் வெற்றி பெற்றுள்ளார்கள்..

கற்படை வீரராக ராணாவின் நடிப்பில் மிடுக்கு, கம்பீரம் என கனகச்சிதம்.. ஆரம்பத்தில் சாதுப்பசுவாக இருந்தாலும், தனது உயரதிகாரி கோபக்கார மேனனின் பரபரப்பை இவரும் உள்வாங்கிக்கொண்டு உருமாறும் காட்சிகளில் தீப்பறக்க வைத்திருக்கிறார்.. படத்தின் முக்கிய நபரான கே.கே.மேனனின் கோபமும் போர்த்தந்திரங்களும் நம்மை சிலிர்க்க வைக்கிறது..

மற்ற அதிகாரிகளாக வரும் அதுல் குல்கர்னி, நாசர், ஓம் புரி என பலரும் தங்களது பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள். கதாநாயகியாக இல்லாமல் கதையின் முக்கிய கதாபாத்திரமாக, பங்களாதேஷ் அகதியாக வரும் டாப்ஸி மென்சோகத்துடன் வலம் வருகிறார் என்றாலும் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, அவர் மீது நம் பார்வையை திரும்ப விடவில்லை.

நீர்மூழ்கி கப்பலும் போரும் தான் கதைக்களம் என்றானதால் ஒளிப்பதிவாளர் மதியின் கேமரா டபுள் டூட்டி பார்த்திருகிறது.. நிச்சயமாக படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் நீர்மூழ்கி கப்பலில் பயணப்பட்டு வந்த உணர்வு தங்களுக்கு ஏற்பட்டதை இல்லை என்று மறுக்கமாட்டார்கள். போரின் தீவிரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இசையமைப்பாளர் கேயின் இசை அமைந்துள்ளது..

பாகிஸ்தான் கப்பலின் பெயரைத் தலைப்பாகக் கொண்டாலும், இந்தியக்கப்பற்படையின் வீரதீரத்தையும், தியாகத்தையும், பெருமையைச் சொல்லும் படமாகவே இந்த ‘காஸி’ உருவாகி இருக்கிறது. இந்த சவாலான கதையை தேர்ந்தெடுத்ததற்காகவும் அதை சுவாரஸ்யமான திரைக்கதையில் விறுவிறுப்பாக நகர்த்தியதற்காகவும் இயக்குனர் சங்கல்ப் ரெட்டியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் என்னதான் கருத்து மோதல்கள் இருந்தாலும் எதிரியை அழிக்க அவர்கள் தங்கள் மனஸ்தாபம் மறந்து ஒன்று சேர்வது நெகிழ வைக்கும் காட்சி. குறிப்பாக க்ளைமாக்ஸில் இக்கட்டான சூழலில் இருக்கும் நம் நீர் மூழ்கி கப்பல், பாதுகாப்பாக இருக்கும் பாகிஸ்தானின் ‘காஸி’யை பிளான் பண்ணி அட்டாக் பண்ணும் காட்சி.. சான்ஸே இல்லை..

ஒவ்வொரு ரசிகனும் ஓர் இந்தியக்குடிமகான பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு வாய்பை தனது பங்களிப்பாக வழங்கியிருக்கிறது இந்த ‘காஸி’.