ஜீனியஸ் – விமர்சனம்

ரவி, ஜேக்கப் இருவரும் பார்க் பெஞ்சில் அமர்ந்திருக்க, அவர்கள் அருகிலேயே தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான் சங்கர்.. மூவரும் சென்னையில் அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள்.. சிறிது நேர மௌனத்திற்குப்பின் ரவி அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக சங்கரை அழைத்தான்

ரவி : சங்கர்.. என்னப்பா பிரச்சனை.. வீட்டம்மா கூட தகறாரா..? இல்ல ஏதாவது பணப்பிரச்சனையா..?

சங்கர் மௌனமாக இல்லையென தலையாட்டுகிறான்.

ஜேக்கப் : அப்ப எதுக்கு இவ்ளோ சோகம்..?

சங்கர் : என் பையன் நிதிஷோட எதிர்காலத்த பத்தி நினைச்சாத்தான்ப்பா ஒரே கவலையா இருக்கு..

ரவி : ஏழாவது படிக்கிற பையனை பத்தி இப்பவே என்னப்பா கவலை..?

சங்கர் : இதுவரைக்கும் பர்ஸ்ட் ரேங்க் எடுத்துட்டு வந்தவன், இப்ப ரெண்டாவது எடத்துக்கு போயிட்டான். வரவர விளையாட்டுத்தனம் அதிகம் ஆகிருச்சு..

ஜேக்கப் : விடுப்பா இந்த வயசுல இதெல்லாம் சகஜம்தான்.. போகப்போக சரியாயிருவான்.

சங்கர் ; இல்லப்பா.. அப்படி விட்டுற முடியாது அவனப்பத்தி நான் எவ்வளவு கனவுகள் வச்சிருக்கேன் தெரியுமா..? அவனை டாக்டர் ஆக்கணும் .. அப்புறம்.. வெளிநாட்டுக்கு அனுப்பி..

ரவி : ஏய்.. ஏய்..நிறுத்துப்பா.. அவன் ஏழாவது படிக்கிறப்பவே இப்படி அவன் மேல உன் கனவை திணிக்க ஆரம்பிச்சீன்னா அப்புறம் ‘ஜீனியஸ்’ படத்துல வர்ற ஹீரோவுக்கு ஆன கதிதான் உன் பையனுக்கும் ஆகும். என்னா ஜேக்கப்பு..நான் சொல்றது சரிதானே..?

ஆமாம் என ஜேக்கப்பும் தலையாட்டுகிறான்..

சங்கர் : ஜீனியஸ் ஹீரோவுக்கும் என் பையனுக்கும் என்னப்பா முடிச்சு போடுறீங்க..?

ரவி ; பொறுப்பா… பதறாத.. நம்ம டைரக்டர் சுசீந்திரன் இருக்கார்ல.. அவர் டைரக்ட் பண்ணியிருக்க ‘ஜீனியஸ்’ படத்துலயும் இப்படித்தான் நடந்துச்சு.. அதான் டக்குன்னு ஞாபகம் வந்துச்சு..

சங்கர் குழப்பமாக பார்க்க, ஜேக்கப் தொடருகிறான்.

ஜேக்கப் : சங்கர் உனக்கு கொஞ்சம் டீடெய்லா சொன்னாத்தான் புரியும். படத்தோட ஹீரோ ரோஷன் சாப்ட்வேர் கம்பனில வேலை பார்க்குறவர்.. அதி புத்திசாலி.. மத்தவங்க ஒரு மாசத்துல முடிகிற வேலையை இவரு ஒரு வாரத்துல முடிச்சுருவாரு. இதனால முதலாளி எல்லா வேலையும் இவர் தலைல கட்டுறாரு. ஒருகட்டத்துல அதிகமா யோசிச்சு யோசிச்சு அவரோட மூளையே ஜாம் ஆகி நின்னுறுது. பதறியடிச்சு டாக்டர் கிட்ட தூக்கிட்டு போறாங்க.. டாக்டர் ஜெயபிரகாஷ் அவரை பரிசோதிச்சுட்டு அவருக்கு எதோ ஒரு புதுவிதமான நோய் இருக்குன்னு சொல்றாருப்ப்பா.

சங்கர் : சரிப்பா.. அதுல ஹீரோவுக்கு வர்ற பிரச்சனைக்கும் என் பையனை பத்ததி நான் புலம்பரறக்கும் என்னப்பா சம்பந்தம்..?

ரவி ; விஷயம் இருக்குப்பா. டாக்டர் அவரை மனோவசியப்படுத்தி பார்த்ததுல ரோஷன் சின்ன வயசுல எவ்வளவு ஜாலியா இருந்தான், தாத்தா பாட்டி ஊருக்கு போய், ஆத்துல குதிச்சு விளையாடி எப்படி என்ஜாய் பண்ணினான் அப்படின்னெல்லாம் தெரியவருது. அவங்க அப்பா ஆடுகளம் நரேன், அம்மா மீரா கிருஷ்ணன் இவங்க ரெண்டு பேரும் கட்டாயப்படுத்தமாலேயே, எல்லாத்துலயும் பர்ஸ்ட் மார்க் வாங்குறான்.. எல்லா போட்டிலேயும் பர்ஸ்ட் வர்றான்.. ஆனா யாரோ ஒரு புண்ணியவான், போகுற போக்குல உங்க பையனை இன்னும் நல்ல ட்ரெய்ன் பண்ணீங்கன்னா பெரிய லெவல்ல வருவன்னு ரோஷன் அப்பா காதுல ஓதிட்டு போறாரு..

சங்கர் : நல்லத தான சொன்னாரு..

ஜேக்கப் : கிழிஞ்சது போ.. அன்னையோட தொலஞ்சது ரோஷனோட சந்தோசம் எல்லாம்.. அதுவரைக்கும் பையன் என்ன மார்க் வாங்குறான்னு கூட தெரியாம பிராக்ரஸ் ரிப்போர்ட்ல கையெழுத்து போட்டு வந்த ஆடுகளம் நரேன், அதுக்கப்புறம் அவனை நாலுவிதமான டியூஷன், நைட் ஸ்டடி, கோச்சிங் கிளாஸ்னு தூங்கக்கூட நேரமில்லாம பெண்டை நிமுத்துறாரு. லீவுல சொந்த ஊருக்கு போக கூடாது, வெளியில பிரண்ட்ஸோட போய் விளையாட கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிசன். அப்படி படி படின்னு போட்டு அவனை பிராண்டி எடுத்தார்ல, அதோட விளைவுதான் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி இன்னைக்கு அவர் பையனோட மனநலமே பாதிக்குற அளவுக்கு கொண்டு வந்து விட்ருச்சு..

சங்கர் : சும்மா கதை விடாதப்பா..

ரவி ; அட.. இத அந்த டாக்டரே தெளிவா சொல்லிடுறாருப்பா.. இனியாவது கொஞ்ச நாளைக்கு வேலை, டென்சன்னு இல்லாம ரிலாக்ஸா இருக்க முடிஞ்சா ஒருவேளை ரோஷன் நார்மல் ஆகலாம்னு சொல்றாரு. உன் பையனும் இப்படி ஆகணும் தான் விரும்புறியா..?

சங்கர் : ஏன்ப்பா நான் அவ்வளவு கொடுமைகாரனாப்பா..? நாளைக்கு அவன் ப்யூச்சர் நல்லா இருக்கணும்னு. தான..

ரவி : இங்க பாருடா, திரும்பவும்.. எப்பா நீ மட்டும் இல்ல.. எல்லா பேரன்ட்ஸுக்கும் அப்படித்தான் தோணும்.. அதுக்குன்னு ஓவரா போக கூடாதுங்கிறதத்தான் இந்தப்படத்துல சொல்றாங்க..

சங்கர் : சரி ஹீரோவுக்கு அவரோட பிரச்சனை சரியாகி நார்மல் ஆனாரா..?

ஜேக்கப் : அவரை நார்மல் ஆக்குறதுக்கு அவரோட அப்பா, அம்மா, அப்புறம் அப்பாவோட ப்ரண்ட் சிங்கம்புலி எல்லாம் சேர்ந்து முயற்சி எடுக்கிறாங்க.. இதுல சிங்கம்புலி நல்லதுன்னு நெனச்சு பண்ணின ஒரு காரியம் ரோஷன் விஷயத்துல ஏடாகூடமா மாதிரி ஆகிப்போகுது.. ஆனா அந்த கெட்டதுலயும் நல்லது ஒன்னு நடக்குது.. அது என்னான்னு தெரிஞ்சுக்க விரும்பினாலும் சரி.. இல்ல அந்த அப்பா பையனை எப்படி மெஷினா நடத்துறாருன்னு பார்க்க விரும்பினாலும் சரி.. முழுசா ஒரு தடவ இந்த படத்த பார்த்துட்டு வா…

சங்கர் : ஹீரோ யாரோ ரோஷன்னு சொல்றீங்க.. புது ஆளாப்பா..?

ஜேக்கப் : புது ஆளுதான்ப்பா.. ஆனா பயப்படாதே.. டைரக்டர் சுசீந்திரன் ரொம்பவே புத்திசாலித்தனமா அவரோட கேரக்டரை வடிவமைச்சு இருக்கிறதால, அவரும் படத்தோட ஒரு கேரக்டராத்தான் நமக்கு தெரியுறாரு.. சிரிக்கவும் தெரியாத, அழவும் தெரியாத ஒரு கேரக்டர் அப்படிங்கிறதுனால ஹீரோவுக்கு உண்மையிலேயே இதுல எதுவும் சரியா வரலைனாலும் கூட, அட என்னமா நடிக்கிறார்ப்பா அப்படிங்கிற மாதிரி மேட்ச் ஆகிடுது. ஆனா அதேசமயம் ரோஷனும் குறை சொல்ற அளவுக்கெல்லாம் நடிக்கல.. சில நேரம் அவரை அறியாமலேயே காமெடி பண்ணி நம்மள சிரிக்க வைக்கவும் செய்யுறாரு.

ரவி : ஹீரோயின் பிரியா லால் கேரளாப்பொண்ணு.. தமிழ்ல்ல இதான் பர்ஸ்ட். ஒரு சாயலுக்கு நம்ம மடோனா செபாஸ்டியன் மாதிரி கூட தெரியுது. ஆனா நடிப்புல செம ஷார்ப்.

சங்கர் : மத்தவங்கல்லாம் எப்படி..?

ஜேக்கப் : ஆடுகளம் நரேன் அப்படியே உன்ன மாதிரித்தான் பையனை படி படினு சொல்லிட்டு.. படம் பார்த்தா உனக்கே புரியவரும். அம்மா மீரா கிருஷ்ணனுக்கு பையன் இப்படி ஆயிட்டானேன்னு, அதுக்கு காரணமான அப்பா மேல கோபத்த காட்டுற கேரக்டர்.. சரியா பண்ணிருக்காங்க.

சங்கர் : நீங்க சொல்றத பாத்தா படம் சீரியஸா இருக்கும் போலேயே…?

ரவி : கதை சீரியஸ் தாம்ப்பா.. ஆனா ஜாலிய கொண்டு போறாங்க. சிங்கம் புலி வந்தபின்னாடி நடக்குற கலாட்டாக்கள் நல்ல காமெடிதாம்ப்பா. அதே மாதிரி தாத்தா ஆடுகளம் ஜெயபாலன், ஹீரோ ப்ரண்டா வர்ற போராளி திலீபன்னு கதைக்கு எத்த கேரக்டர்களா புடிச்சு போட்டுருக்கார் சுசீந்திரன்.

ஜேக்கப் : மியூசிக் யுவன் சங்கர் ராஜா.. பரபரன்னும் இல்ல, அதே சமயம் மந்தமாவும் இல்ல.. கதைக்கேத்த மாதிரி வளைஞ்சு கொடுத்து இசையமைச்சிருக்காரு.

சங்கர் : மெசேஜ் சொல்ற படத்தை அவ்வளவு நேரம் எப்படிப்பா உக்கார்ந்து பார்க்குறது..?

ரவி : மெசேஜ் சொல்ற படம் தான்…. ஆனா அதை போரடிக்காம சொல்றதுல தான் தன்னோட ஆட்டத்தை ஆடியிருக்கார் சுசீந்திரன். அதுவுமில்லாம படமும் ஒண்ணே முக்கா மணி நேரத்துக்கும் கம்மியாத்தான் ஓடுது. அதனால ஆரம்பிச்சதும் தெரியாது முடிஞ்சதும் தெரியாது.

ஜேக்கப் : இந்தப்படத்தை பார்த்துட்டு டியூஷன் செண்டர்லேய்யும் கோச்சிங் செண்டர்லயும் கூட்டம் குறைஞ்சதுன்னாலும், தெருவுலயும் கிரவுண்டிலேயும் பசங்க விளையாடுறது அதிகமாச்சுன்னாலும் அதுதான் இந்தப்படத்துக்கு கிடைச்ச வெற்றி.. மொதல்ல நீ மாறிட்டாலே, அது இவ்ளோ நேரம் இந்தப்படத்தை பத்தி உனக்கு எடுத்துச்சொன்ன எங்களுக்கு கிடைச்ச வெற்றி.

ரவி : போறதுதான் போற தனியா போகமா பையனையும் வீட்டம்மாவையும் சேர்த்து கூட்டிட்டு போ.. அட.. டிக்கெட் ஸ்பான்சர் என் செலவுப்பா.. நாளைக்கு சண்டே தானே கிளம்பு கிளம்பு..

பார்க்கில் மணலில் புரண்டு விளையாடிக்கொண்டு இருந்த ஜேக்கப், ரவியின் பையன்கள் அப்பா என அழைத்தபடி ஓடிவர அவர்கள் சட்டையெல்லாம் ஒரே மண், புழுதி.

இருக்கட்டும்.. நாளைய ஜீனியஸ்களின் சட்டைகளில் இன்று ‘கறை’ படிந்தால் நல்லதுதானே..