கேங்ஸ் ஆப் மெட்ராஸ் – விமர்சனம்

இதுவரை தமிழ் சினிமாவில் பல கேங்ஸ்டர் படங்கள் வந்துள்ளன. முதன்முறையாக ஒரு பெண்ணை மையப்படுத்திய கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் என்ன வித்தியாசம் காட்டி உள்ளார்கள் பார்க்கலாம்.

வேறு மதத்தைச் சேர்ந்த அசோக்கும் பிரியங்காவும் காதல் திருமணம் செய்து கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்படுகிறார்கள் இந்த நிலையில் அசோக்கிற்கு அந்த ஏரியா தாதாவான வேலுபிரபாகரனின் கேங்கில் வேலை கிடைக்கிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் பிரியங்கா கண் முன்னாடியே போலீசாரால் என்கவுன்டரில் கொல்லப்படுகிறார்.. அதிர்ச்சி அடையும் பிரியங்கா இதன் பின்னணியில் அசோக்கின் முதலாளி வேலு பிரபாகரனே இருப்பதை அறிகிறார்.

தனது கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக மும்பைக்குச் சென்று வேலுபிரபாகரனின் எதிரியான டேனியல் பாலாஜி உதவியுடன் தற்காப்பு கலையுடன் ஆயுதப் பயிற்சியும் எடுக்கிறார் பிரியங்கா.

அவரது ஆட்கள் துணையுடன் வேலுபிரபாகரனின் சாம்ராஜ்யத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க முயற்சி எடுக்கிறார். அவரது திட்டம் பலித்ததா..? டேனியல் பாலாஜி பிரியங்காவுக்கு உதவி செய்யும் காரணம் என்ன..? வேலு பிரபாகரன் இதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே மீதிக்கதை.

ஒரு சில காட்சிகளில் மட்டும் நாயகன் என்கிற பெயருக்கு வந்து செல்கிறார் அசோக். அதன்பின் மொத்தப்படமும் நாயகி பிரியங்கா வசம் போய் விடுகிறது காதலனை இழந்து தவிக்கும் அப்பாவி பெண்ணாக, அவன் சாவுக்கு பழிவாங்க சபதம் எடுக்கும் வீர பெண்மணியாக என இருவித நடிப்பை வித்தியாசமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் பிரியங்கா. அதேசமயம் வீர பெண்மணியாக அவரை காட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பில்டப் காட்சிகளில் செயற்கைத்தனம் ரொம்பவே அதிகம்.

ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன் இந்த படத்தில் தாதாவாக மிரட்டியுள்ளார். இனி பிசியான நடிகராக பல படங்களில் அவரை நாம் பார்க்கலாம். டேனியல் பாலாஜி வழக்கம்போல வில்லத்தனம் காட்டாமல் குணச்சித்திர நடிப்பில் நம்மை கவர்கிறார். வில்லன் லாலாவாக வரும் விஜய் மற்றும் அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. வேலு பிரபாகரன் விசுவாசியாக வரும் ஈ.ராம்தாஸ் உதவி செய்யப்போய் பரிதாபம் அள்ளிக் கொள்கிறார். போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் களத்தில் வழக்கம் போல தனது ஆட்டத்தை ஆடியுள்ளார்.

மாயவன் என டெக்னிக்கலாக கதைசொல்லி மிரட்டிய இயக்குனர் சி.வி.குமார் இந்த படத்தில் கேங்ஸ்டர் வாழ்க்கையின் இன்னொரு பரிணாமத்தை காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் அதை கதாநாயகியை முன்னிறுத்தி படமாக்கியிருப்பது தான் மனதில் ஒட்ட மறுக்கிறது. அதிலும் இவ்வளவு ரத்தமும் இம்முறையும் தேவையா என்கிற அயர்ச்சியும் ஏற்படுகிறது. குறிப்பாக நடுரோட்டில் இரண்டு போலீசாரைக் கொன்றுவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரியாணியை மீண்டும் சென்று கதாநாயகி சாப்பிடுவதை எல்லாம் நாம் ஜீரணிப்பதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும்..