கண்டக்டர் to காலா ; வேகம் குறையாத ரஜினி எக்ஸ்பிரஸ்

சூப்பர்ஸ்டார் ரஜினி..

இந்திய அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தியவர்.. உலக அரங்கில் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியவர்.. அவர் நடித்த முதல் படமான அபூர்வ ராகங்கள் படம் ரிலீசான தேதியை கணக்கில் எடுத்துக்கொண்டால் இதோ 42 வருட சினிமா பயணத்தில் இன்னும் எரிபொருள் தீராத எக்ஸ்பிரஸ் ஆக நிற்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்சினிமாவும் சரி பொதுமக்களும் சரி ஒரே ஒரு நபரை மட்டுமே தங்களது ஆதர்ச ஹீரோவாக அடையாளப்படுத்தி வந்திருக்கின்றனர் என்பது கண்கூடான வரலாறு.. தமிழ்நாட்டில் சினிமா தோன்றிய காலத்தில் தியாகராஜ பாகவதரும், அவரது சகாப்தம் முடியும் தறுவாயில் அவரது வழித்தோன்றலாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அவரை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் என தலைமுறை இடைவெளி விட்டு உரிய தலைகளில் மட்டுமே ராஜகிரீடம் சூட்டப்பட்டு வருகிறது..

அவரது காலகட்டத்திற்குப்பின் அது யாருடைய தலையில் சேரவேண்டுமோ அதுவாகவே தானாக சென்று அமர்ந்துகொள்ளும். ஆனால் ரஜினி மீது சூட்டப்பட்ட கிரீடம் இன்னும் அவர் தலையிலேயே இருக்கும்போது அதை சூடிக்கொள்வதற்குத்தான் இன்று போட்டிக்கு எத்தனை தலைகள்..? அப்பப்பா..

இன்றும் தமிழ் சினிமா வர்த்தகத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திசெல்லும் மிகப்பெரிய சுமையை ரஜினியின் முதுகிலேயே ஏற்றி வைத்துள்ளது தமிழ் திரையுலகம். அதனாலேயே கபாலி, காலா என இன்னும் ரஜினியின் ஓட்டம் நிற்காமல் தொடர்கிறது.. தொடரத்தானே வேண்டும்..?

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த அவர் வயதுள்ள சமகால நடிகர்களாகட்டும்… அல்லது அவரைவிட பத்து வயது குறைந்தவர்களாகட்டும்… இன்றைய தேதிகளில் அவர்களுக்கு மேக்கப் போட்டாலும் எண்பது, தொண்ணூறுகளில் இருந்த அவர்களது உருவத்தை மீட்டுக்கொண்டுவருவது என்பது கல்லில் நார் உரிக்கிற மாதிரித்தான். ஆனால் ரஜினி ஒருவருக்குத்தான் மேக்கப் போட்டால் மீண்டும் இளமை திரும்பும் வரத்தை ஆண்டவன் கொடுத்திருக்கிறான். கோடிகளில் ஒருவருக்குத்தான் இந்த வரம் கிடைக்கும்.

இந்த 42 வருடங்களில் ரஜினி என்கிற பிம்பத்தை உருவாக்கியதில் பல இயக்குனர்களின் பங்களிப்பு இருக்கிறது என்றாலும் ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கும், ரஜினியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் எஸ்.பி.முத்துராமனுக்கும் தான் பெரும் பங்கு இருக்கிறது. இவர்களுக்குப்பின்னர் கடந்த பத்து வருடங்களாக இந்த பொறுப்பு இயக்குனர் ஷங்கரின் தோள்மீது ஏறியிருக்கிறது.

புதுமையையான, அப்டேட் விஷயங்களுடன் வரும் படைப்பாளிகளுடன் தன்னை பொருத்திக்கொள்ளும் நடிகன் மட்டுமே கால ஓட்டத்தால் அடித்துச்செல்லப்படாமல் எதிர்நீச்சல் போட முடியும்.. ரஜினிக்குப்பின் அறிமுகமான இரண்டு தலைமுறை நடிகர்கள் கூட அப்படி எதிர்நீச்சல் போட முடியாமல், ஓய்ந்து ரிட்டையர்டு ஆகி வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டனர்…

திரையுலகில் தனிப்பெரும் மாஸ் ஹீரோவாக 42 வருடங்களாக சூப்பர்ஸ்டார் ரஜினி நிகழ்த்தி வரும் சாதனையை உலக சினிமா அரங்கில் இதுவரை யாரும் நிகழ்த்தியதும் இல்லை.. இனி நிகழ்த்தப்போவதும் இல்லை.