“கேரளாவில் இருக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை” ; கேணி’ விழாவில் பார்த்திபன் வேதனை..!

மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தற்போது ‘கிணர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்தப்படம் தமிழில் ‘கேணி’ என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இதில் பசுபதி, பார்த்திபன், நாசர், ரேவதி, ரேகா, அர்ச்சனா, அனுஹாசன் மற்றும் ஜெயப்ரதா என தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் நடிக்கின்றனர்

முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் ஜெயப்ரதா, பார்த்திபன், ரேவதி, ரேகா, அனுஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சுஹாசினி மணிரத்னம் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசுகையில், “இந்த நாடே பசுமைப் பூங்காவாக மாற வேண்டுமெனில் முக்கியமாக தண்ணீர் தேவை. ஆன்மீக அரசியலைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது நீர்மீக அரசியல் பேசும் படம். இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு மனித மனங்களை இணைக்க வேண்டும். அப்படி இதயங்களை இணைக்கும் ஒரு படமாக நிச்சயமாக “கேணி” இருக்கும்.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு கேரள எல்லைக்குள் பிரிக்கப்படுகிற தமிழகத்தைச் சேர்ந்த கிணற்றுக்காக கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து தமிழர் ஒருவர் போராடுவதே “கேணி” படத்தின் கதை. இந்தப் படத்தை எடுத்திருப்பதும் ஒரு மலையாளி. பொதுவாக நீர் பிரச்சனை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது.

தண்ணீரை வைத்துக் கொண்டு கேரளாவோ தமிழ்நாடோ அரசியல் செய்யலாம், ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஏனென்றால் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலையில்லை, பிரச்சனைகளைப் பேசிக்கொண்டே தான் இருப்போம்.

தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது, அது பாராட்டிற்குரியது. அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால் தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த “கேணி” படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

எனக்கு பெரியார் விருது கொடுத்த போது சில விஷயங்கள் பேசினேன். அதற்கு கூட சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தளவிற்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டிற்குரியது” என்று பேசினார்.

நடிகை ஜெயப்ரதா பேசும் போது, “நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, ஏழைஜாதி, தசாவதாரம் இப்போது கேணி என தமிழில் நல்ல படங்களில் நடித்திருக்கிறேன். இந்த கேணி படத்தில் நான் நடித்திருக்கும் “இந்திரா” என்கிற கேரக்டர், என் மனதிற்கு மிக நெருக்கமாக மாறிப்போயிருக்கிறது. எல்லோரும் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம், ஆனால் இந்த சமூகத்தை பெண்கள் தான் வழிநடத்த வேண்டும் என “கேணி” பேசியிருக்கிறது.

தண்ணீர் என்பது தமிழ்நாடு சம்பந்தப்பட்டதோ, கர்நாடகா, கேரளா சம்பந்தப்பட்டதோ கிடையாது அது உலகளாவிய பிரச்சினை. அப்படி ஒரு உலகளாவிய பிரச்சினையை கதையாக்கி, அதில் என்னையும் நடிக்க வைத்ததற்காக இயக்குநர் நிஷாத்திற்கு நன்றிகள்” என்று பேசினார்.

இயக்குநர் எம்.ஏ.நிஷாத் பேசும் போது, “மலையாளத்தில் “கிணறு” எனது ஏழாவது படம், தமிழில் “கேணி” என் முதல் படம். எனது முந்தைய படங்களைப் போலவே கேணியும் சமூகம் சார்ந்த படம் தான். இந்த பூமியில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் பொதுவான தண்ணீரை, மனிதன் எப்படி சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்வியை கேணியின் வாயிலாக எழுப்பியிருக்கிறேன். வெயில் மழை எல்லாம் இயற்கை தந்தது, வறட்சி மனிதனால் உண்டாக்கப்பட்டது. இந்தப் படம் நிச்சயமாக எல்லோராலும் பேசப்படக்கூடிய படமாக கண்டிப்பாக இருக்கும்” என்றார்

‘தளபதி’ படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இணைந்து இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள் என்பது இந்தப்படத்தின் சிறப்பம்சம்.