விவசாயிகளின் விஷயத்தில் பிரசன்னா-சினேகா எடுத்த அதிரடி முடிவு..!

prasanna - sneha help

விவசாயிகளின் போராட்டம் ஒரு பக்கம் வலுத்துக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் அவர்களுக்கான ஆதரவும் பெருகிக்கொண்டே வருகிறது. விவசாயிகளுக்காக வரும் ஏப்-25ஆம் தேதி நடைபெற இருக்கும் பந்த்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.. இந்த சூழலில் தான், கடனால் பாதிக்கப்பட்ட 15 விவசாயிகளுக்கு உதவுவதற்காக நடிகர் பிரசன்னாவும், அவரது மனைவியும் நடிகையுமான சினேகாவும் ரூ.2 லட்சத்தை நிதியாக வழங்கி பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளனர்.

“40 நாட்களுக்கும் மேலாக நமது விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. நாம் சாப்பிடுவதற்கு ஏதோ ஒரு விவசாயி தான் காரணம். அதனால் கண்ணுக்கு எதிரில் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவ நினைத்தோம். பெரிய அளவில் செய்ய முடியாவிட்டாலும், நம்மால் முடிந்த அளவு சிறுசிறு உதவிகளை செய்யலாம் என்ற நோக்கத்தில் தான் இதனை செய்கிறோம்.

எங்களின் நண்பர்கள் சிலர் விவசாய சங்கங்கள் பலவற்றுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். அவர்கள் மூலம் கடனில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சிலருக்கு எங்களால் முடிந்த நிதியை வழங்க முடிவு செய்தோம். அதற்காக தான் 15 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்தை நிதியாக வழங்கி உள்ளோம்.” என கூறியுள்ளார் பிரசன்னா.

நடிகை சினேகா, “இது விளம்பர நோக்கத்திற்காக செய்யப்பட்ட உதவி இல்லை. விவசாயிகளுக்கு பலரும் உதவி வருகிறார்கள். ஆனால் அவை வெளியில் தெரியாமல் உள்ளது. எங்களை பார்த்து பலரும் இது போன்று விவசாயிகளுக்கு உதவ முன்வர வேண்டும். இப்போது நாங்கள் செய்துள்ள உதவி கடலில் சர்க்கரை கலப்பது போன்றது தான். தேவைகள் அதிகம் உள்ளது. அதனால் நம்மால் முடிந்த உதவியை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.